லயன்ஸ் சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
காரனோடையில் லயன்ஸ் சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்வழங்கப்பட்டது .;
காரனோடையில் லயன்ஸ் சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், காரனோடையில் லயன்ஸ் சங்கம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் ரவிக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சோழவரம் ஒன்றியத்தில் உள்ள சோழவரம் ஊராட்சி, நெற்குன்றம் ஊராட்சி, ஆத்தூர் ஊராட்சி உள்ளிட்ட ஊராட்சிகளில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு மற்றும் ஏழை பொதுமக்களுக்கு புத்தாடை, பட்டாசு, இனிப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்வில்,காரனோடை லயன் சங்க நிர்வாகிகள் சங்கர், ரவிதாஸ், ரெஜிகுமார், லயன் உறுப்பினர்கள் புருஷோத்தமன் மோகன், விநாயகம், சுரேஷ் மற்றும் காரனோடை லயன் சங்கத் தலைவர் கருப்புசாமி, செயலாளர், மணிகண்டன், பொருளாளர் ஜெயபால், நண்பர்கள் டில்லி பாபு, சுதாகர், விஷ்ணுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இதில் நலத்திட்டங்களை பெற்றுக் கொண்ட தூய்மை பணியாளர்கள் லைன்ஸ் சங்கத்திற்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இந்தியாவில் பன்னாட்டு அரிமா சங்கம்:
பன்னாட்டு அரிமா சங்கங்கள் (Lions Clubs International, LCI) உலகளாவிய ரீதியில் நலிந்தோர்க்கான நலதிட்டங்களை செய்துவருகிறது. மொத்தம் 203 நாடுகளில் 44,500 சங்கங்களில் 1.4 மில்லியன் உறுப்பினர்களுடன் இவ்வியக்கம் செயற்பட்டு வருகிறது.1879 ஆம் ஆண்டு 13ம் நாள் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அரிசோனா மாநிலத்தில் சிலா ஆற்றின் கரையில் அமைக்கப்ட்டிருந்த ராணுவ முகாம் ஒன்றில் பிறந்த மெல்வின் ஜோன்ஸ் என்பவரால் 1917 -ஆம் ஆண்டு இந்த "அரிமா சங்கம்" என்ற அமைப்பு தொடங்கப் பட்டது. பின்னர் அது பல்வேறு கட்டங்களைத் தாண்டி இன்று உலகளாவிய அமைப்பாக 203 நாடுகளில் பரவி உள்ள இவ்வமைப்பு, உலகம் முழுவதும் நலிந்தோர்க்கான நலதிட்டங்களை செய்து வருகிறது.
இந்தியாவில் கடந்த 3.2.1956 -ஆம் ஆண்டு மும்பையில் நோசிர் என். பண்டோல் என்பவரைத் தலைவராக கொண்ட புதிய சங்கம் தொடங்கப்பட்டது. 1957 -ஆம் ஆண்டு அரிமா மாவட்டம் 304 தொடங்கப்பட்டு, பண்டோல் முதல் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 23.7.1957 -ல் தென்னகத்தில் முதன் முதலாக பெங்களூரிலும், பின்னர் 21.9.1957 -இல் சென்னையிலும் தொடங்கப்பட்டது.
அனைத்து நாட்டு நல்லுறவை உலகெங்கும் உள்ள பெருமக்களிடையே உருவாக்கி வளர்த்தல்.நல்லரசு, நற்குடிமை ஆகியவற்றின் அடிப்படைக் கூறுகளைப் பெருக்குதல்.குடிமை, கலாசாரம், சமுதாயம்,ஒழுக்கம் ஆகிய துறைகளில் மக்கள் நலமுற வாழ ஊக்கத்துடன் செயல்படுதல்.உறுப்பினர்களிடையே நட்பும், நல்லுறவும், புரிந்து கொண்டு பழகும் பண்பு வளரச் செய்து ஒற்றுமையை மலர்வித்தல்.
பொதுமக்களை பாதிக்கும் பிரச்சனைகளை மனம் விட்டுப் பேசி கருத்து வழங்க ஏற்பாடு செய்தல். ஆனால் கட்சி அரசியலும், பாகுபடுத்தும் மதமும் சங்க உறுப்பினர்களால் வாதிக்கப்பட மாட்டாது.சொந்த பண வருவாயை நோக்கமாக கொள்ளாமல், தொண்டுள்ளம் கொண்ட சமூகப்பணி செய்பவர்களை ஊக்குவித்தல், வாணிபம், தொழில், அரசுத்துறை, தனியார் முயற்சி ஆகியவற்றில் திறமையும், நெறிமுறைத் தரத்தையும் ஊக்கி வளர்த்தல் ஆகிய கொள்கைகளை நோக்கமாகக் கொண்டு லயன்ஸ் சங்கம் செயல்பட்டு வருகிறது.