இந்தியாவில் கருப்பு பணத்தை முற்றிலுமாக ஒழிக்க என்ன தான் வழி?

இந்தியாவில் கருப்பு பணத்தை முற்றிலுமாக ஒழிக்க என்ன தான் வழி என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுகிறது.

Update: 2022-08-12 07:03 GMT

கருப்பு பணம் ஒழித்திருந்தால், இப்போது ஏன் இவ்வளவு பணம்  கட்டுக்கட்டாக பணம் பிடிபடுகிறது? கறுப்பு பணத்தை ஏன் முழுவதுமாக ஒழிக்கவில்லை என்ற கேள்வியை பலரும் எழுப்புகின்றனர். மிகச் சரியான கேள்வி!

உண்மையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கறுப்பு பணத்தை ஒழிக்க முடியுமா? நிச்சயமாக ஒழிக்க முடியாது. ஒரு நிலம் அல்லது வீட்டு மனை வாங்குவதாக வைத்துக்கொள்ளலாம்.அதற்கான அரசாங்கம் குறிப்பிடும் தொகை ஒன்றாக இருக்கும். ஆனால் விற்பவர் ஒரு சதுர அடி அரசு நிர்ணயித்த விலையை விட 10 மடங்கு உயர்வாக சொல்லுவார்.

நான் அரசாங்கம் நிர்ணயித்த விலையை விட ஒரு பைசா அதிகம் தர மாட்டேன் என்று வாங்குபவர் சொன்னால் விற்பவர் அந்த இடத்தை நிச்சயமாக தர மாட்டார் அல்லது நான் நீங்கள் சொன்ன விலையை தருகிறேன் ஆனால் தங்களது வங்கி கணக்கிலோ அல்லது DD ஆகவோ தருகிறேன் என்றாலும் ஒத்துக்கொள்ள மாட்டார்.

ஆகவே அரசாங்கம் நிர்ணயித்த விலையை மட்டுமே DD எடுத்து தரவேண்டும் அதாவது வெள்ளை பணமாக. அது போன்ற 10 மடங்கு பணத்தை பணமாக மாற்றி கையில் தரச்சொல்லி கேட்பார். அந்த பணத்திற்கு விற்பவர் வரி கட்டுவாரா என்றால் நிச்சயமாக இல்லை.இப்போது புரிகிறதா கறுப்பு பணம் எப்படி உருவாகிறது என்று?

அதே போல் தான் தனியார் நபர்களிடம் வட்டிக்கு பணம் வாங்குவதும், அல்லது செலுத்துவதும். இன்னொரு விஷயத்தை கவனித்தால் நாம் அருகில் உள்ள பலசரக்கு கடையிலோ அல்லது வேறு எந்தவிதமான கடையிலோ பொருட்களை வாங்கும் போது அவர்கள் GST பில் தருகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

ஆகவே அவர்கள் வருமானம் எவ்வளவு என பார்த்தால் வருடத்திற்கு பல லட்சங்களை தாண்டும். ஆனால் சிறு வியாபாரிகள் என்ற போர்வையில் சிலர் வருடத்திற்கு மிக குறைந்த அளவு குறிப்பிட்ட வரி செலுத்துகிறார்கள் அல்லது சுத்தமாக செலுத்துவதே இல்லை. இவர்களில் பலர் பள்ளி ,கல்லூரிகளின் கல்வி தந்தைகள்.

கடைசியில் ஒழுங்காக வரி எவன் செலுத்துகிறான் என பார்த்தால் சில தனியார் மற்றும் சில அரசாங்க ஊழியர்கள் மட்டுமே. அதிலும் சில அரசாங்க ஊழியர்கள் சொந்த வீட்டில் இருந்து கொண்டு வீட்டு வாடகைபடியை வரி வருவாயிலிருந்து குறைத்துக் கொள்வார்கள்.

4 வீடு வைத்திருப்பார்கள் ஆனால் அதில் வரும் வாடகை வருமானத்தை சிலர் கணக்கில் காட்ட மாட்டார்கள். இந்த மாதிரி எல்லா இடங்களிலும் சட்டத்தில் பல்வேறு ஓட்டைகளை வைத்துக்கொண்டு கறுப்பு பணம் உருவாவதையும் தடுக்க முடியாது.Parallel economy என்ற கருப்பு பொருளாதாரத்தையும் தடுக்க முடியாது.

சரி இந்த கருப்பு பணத்தை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும்?வாக்காளருக்கு தேர்தல் நேரத்தில் கொடுக்க உபயோகமாகும்.மதமாற்றம் செய்ய உதவலாம். தேசத்துரோக செயல்களுக்கு உதவலாம்.ஹவாலா பணமாற்றத்துக்கு உதவலாம்.

ஆக இங்குள்ள வருமான வரி சட்டமெல்லாம் நடுத்தர தனியார் அரசாங்க ஊழியர்களுக்கு மட்டும் கடுமை காண்பிக்குமே தவிர பெரு பண முதலைகள் இதிலெல்லாம் மாட்டாமல் பணத்தை பெருக்க சில கணக்காளர்கள் வழி காட்டவே செய்கிறார்கள். இதற்கு ஏதாவது தீர்வு ஏதாவது சட்ட திருத்தம் செய்ய வழி உண்டா? என்பதே அப்பாவி பொது மக்களின் கேள்வியாக உள்ளது.

Tags:    

Similar News