எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!

இயற்கையை சீரழித்துவிட்டு இந்த மனித சமூகம் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பி குளுகுளுவென வாழ ஆசைப்படும் நாம் மிகப்பெரிய சுயநலவாதி.

Update: 2024-05-04 05:32 GMT

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம்.

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் இப்போது நிலவும் வெயிலின் அனுபவம் குறித்த தனது அனுபாவங்கள் பற்றி கூறியதாவது:

நேற்று எனது மூத்த மகள், மதியம் 2 மணி அளவில் வீட்டிற்கு வந்திருந்தாள். வீட்டிற்குள் நுழைந்த அடுத்த நொடியே அவளுடைய முகம் மாறுவதை என்னால் கணிக்க முடிந்தது. புடவை முந்தானையை எடுத்து நெற்றியை துடைத்துக் கொண்டவள், என்னப்பா நம்ம வீட்டிலேயே இவ்வளவு சூடு இருக்குது என்று அலுத்துக் கொண்டாள்.

அவளுடைய ஆதங்கத்தை என்னால் நன்றாகவே உணர முடிகிறது. அவள் பிறந்த இந்த 23 ஆண்டுகளில் எந்த ஆண்டும் இவ்வளவு வெப்பத்தை எங்கள் கிராமத்தில் நான் அனுபவித்ததில்லை. மலையடிவார கிராமம் என்பதால் ஓரளவு இதமான சூழல் எப்போதும் இருந்து கொண்டிருக்கும்.

ஆனால் இன்றைக்கு நிலைமை மாறி இருக்கிறது. பகல் நேரத்தில் வீட்டினுள் அமர்வது என்பது, ஒரு அக்கினி குண்டத்தில் அமர்வதைப் போல என்னால் உணர முடிகிறது. வெப்பம் தகிக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்குள் 2, 3 முறை மழை பெய்தும் வெப்பத்தின் தாக்கம் கொஞ்சமும் குறையவில்லை.

வருடம் முழுவதும் குளிர் உறைந்து கிடக்கும் ஊட்டியிலேயே, 85 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நான்கு நாட்களுக்கு முன்னால் பதிவாகி இருக்கிறது. கொடைக்கானலும் இதற்கு விதிவிலக்கல்ல. மூணாறின் நிலைமை இன்னும் கொஞ்சம் கூடுதல் கஷ்டமாகவே இருக்கிறது.

2008 ஆம் ஆண்டு மூணாறு நகரில் நல்ல தண்ணி ரோட்டில் உள்ள அண்ணன் மாரியப்பனுடைய தேநீர் கடையில், பகல் நேர வெப்பத்தை தணிக்க Al Monard fan வாங்கி வைக்கும் போதே, அச்சத்தில் உறைந்தவன் நான்.

இன்று மூணாறு நகரில் உள்ள நட்சத்திர அந்தஸ்து கொண்ட அனைத்து விடுதிகளில் உள்ள அறைகளிலும் குளிரூட்டி மாட்டப்பட்டிருக்கிறது. இதே நிலைமை தான் ஊட்டியிலும், கொடைக்கானலிலும்.

எங்கள் ஊருக்கு மறுபடியும் வருகிறேன்...

நாங்கள் வாழும் செங்கோட்டை தாலுகா எப்போதுமே ஒரு இதமான கால நிலையை கொண்டது. பெரிய அளவிற்கான வெப்பத்தை இங்கு நீங்கள் காண முடியாது. தண்ணீரும் ஓரளவிற்கு நல்ல தண்ணீராகவே நிலத்தடியில் இருந்து எங்களுக்கு கிடைத்து வந்தது. தென்காசிக்கு அருகே உள்ள மேலகரம் மனிதக் கூட்டத்தின் மையமாக மாறியது போல, எங்கள் செங்கோட்டையில் பெரிய அளவிற்கான விரிவாக்கம் எதுவும் இல்லை. ஆனாலும் வெப்பத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை.

காற்றாடி இல்லாமலேயே 15 வயது வரை வளர்ந்த என்னுடைய மூத்த மகள் இன்றைக்கு இரவு நேரத்தில் தூக்கம் வராமல் தடுமாறுவதை பார்த்தால் அத்தனை வருத்தமாக இருக்கிறது. அடுத்த ஆண்டு அதற்கடுத்த ஆண்டு பத்தாண்டுகள் கழித்து 20 ஆண்டுகள் கழித்து எங்கள் செங்கோட்டையை நினைத்து பார்த்தால் அத்தனை துயரமாக இருக்கிறது.

பரமத்தி வேலூரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் 112 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான போது அச்சத்தில் உறைந்தவர்களில் நானும் ஒருவன். காலையில் தமிழ்நாடு கல்வி இயக்கத்தின் தலைவர் அப்பா நல்லசாமியிடம் பேசிக் கொண்டிருந்த போது ஒரு தகவலை என்னிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.

தான் வாழும் அரச்சலூர் கிராமம் (ஈரோடு மாவட்டம்) முன்னெப்போதும் இல்லாத அளவில் கடுமையாக வெப்பத்தில் சிக்கி இருப்பதாகவும், எப்படி இந்த ஜனங்கள் மீளப்போகிறார்கள் என்று தெரியவில்லை என்றும் கூறிய போது, சூட்டின் தன்மையை என்னால் உணர முடிகிறது. எங்கு போய் முடியப் போகுதோ இந்த வெப்ப அலை என்கிற அவருடைய இயலாமையை நினைத்துப் பார்க்கிறேன்.

செங்கோட்டை அருகே உள்ள எங்களது கிராமமான கலங்காதகண்டியில், போக்குவரத்து எதுவுமற்ற நிலையில், பெரிய அளவிலான மனிதக் கூட்டங்களும் இல்லாத நிலையில், சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத நிலையிலும், நாங்கள் எப்படி இத்தனை கடுமையான வெப்ப அலையில் சிக்கி இருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது.

24 மணி நேரமும் கேரளாவை நோக்கி சென்று கொண்டிருக்கும் ராட்சத கனிம வள கொள்ளை வண்டிகள் உமிழும் வெப்பம், எங்களூரையும் சூழ்ந்திருக்கலாமோ என்று நான் சொல்வதில் ஒரு நியாயம் இருக்கவே செய்கிறது. எத்தனை கோடையிலும் ஆறுகளில் குளித்து மகிழ்ந்த எங்கள் ஊர் இளைஞர்கள், ஒரு தண்ணீர் தொட்டியில் தங்களை நனைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் வேதனை தான் மிஞ்சுகிறது.


வெயிலுக்கு புகழ் பெற்றது வேலூர் என்கிற நிலை மாறி, கரூர் மாவட்டமும், ஈரோடு மாவட்டமும் அந்தக் கணக்கில் வந்தது உண்மையிலேயே பேரதிர்ச்சி தான். காவிரி, அமராவதி, கீழ்பவானி என மூன்று ஆற்றுப் பாசனங்கள் சூழ்ந்து நிற்கும் கரூருக்கும், ஈரோடுக்கும் இதுதான் நிலைமை என்றால்,,, மற்ற மாவட்டங்களின் நிலை என்ன...?

பத்தாண்டுகளுக்கு முன்னால் ஐயகோ ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து விட்டதே, இனி வெயில் உக்கிரமாக இருக்குமே என்று அறிவாளிகள் பேசிக் கொண்டிருந்தார்கள். இன்று பெரிய அளவில் ஓசோன் படலத்தில் விழுந்த ஓட்டையை பற்றி நாம் யாரும் பேசுவதில்லை. மாறாக ஏசி என்ன ரேட்டுக்கு கிடைக்கிறது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

இயற்கையை, இயற்கையாகவே பராமரித்தால் அது நம்மை ஒருபோதும் தீண்டாது. மாறாக அதை நாம் எந்த அளவிற்கு தீண்ட முடியுமோ அந்த அளவிற்கு தீண்டி விட்டு, இன்னமும் என்னூரின் காலநிலை இதமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், என்னை விட சுயநலவாதி யார் இருக்க முடியும்...!

எங்கள் தென்காசி மாவட்டத்தில் சிவகிரி தாலுகா, சங்கரன்கோவில் தாலுகா இது இரண்டும் தான் ஓரளவு வெப்பமிருக்கக் கூடிய தாலுகாக்கள். ஆனால் இன்று தென்காசியில் பகல் நேரத்தில், கோயில் வாசலுக்கு முன்பாக, 5 நிமிடம் நம்மால் நிற்க முடியவில்லை. ஆலங்குளம் தாலுகாவில் கேட்கவே வேண்டாம். மண்டையை பிளக்கிறது வெயில்... செங்கோட்டை தாலுகாவாவது தப்பிக்கும் என நினைத்தோம். அதற்கு எந்த வாய்ப்பும் கொடுக்காமல், கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது வெயில்...!

பங்குனி, சித்திரை மாதங்களில், எங்கள் மாவட்டமெங்கும் அனல் பறக்கும் கோவில் கொடை விழாக்களில், மேளக்காரர்கள் படும் பாடு சொல்லி மாளாது. பட்டினி கிடந்து, பசி உணர்ந்து முளைப்பாரி எடுக்கும் எங்கள் தமிழ் சமூகப் பெண்களும், அம்மனின் அருளை உள்வாங்கி, வானத்திற்கும் பூமிக்குமாய் ஆடித்தீர்க்கும் எங்கள் சாமியாடிகளும், பூச்சட்டி எடுக்கும் என் குல பெண்களும் வெப்பத்தின் வேதனையை அனுபவிப்பதை காணச் சகிக்கவில்லை.

கோவில் திருவிழாக்காகவே ஆண்டு முழுவதும் காத்திருக்கும் எங்கள் ஊர் இளைஞர்கள், தொடர்ந்து ஒரு மணி நேரம் ஆடுவதற்கு சிரமப்படுவதை பார்க்கும் போதும் வேதனை தான் வருகிறது. ஏனென்றால் இதற்கு முன்பெல்லாம் மூன்று முதல் நான்கு மணி நேரம் இடைவிடாது ஆடித்தீர்த்தவர்கள் எங்கள் இளைஞர்கள். வருத்தப்பட்டு என்ன செய்வது. இந்த ஆண்டாவது எங்கள் ஊரை சுற்றி குறைந்தது 300 மரக்கன்றுகளாவது நட வேண்டும் என்கிற சபதத்தோடு இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags:    

Similar News