மாற வேண்டும் மாணவர்களின் உணவுப் பழக்கம்

இன்றைய மாணவர்களிடம் பிடித்த உணவு எது என்று கேட்டால் பர்கர் பீசா, வடா பாவ், பாவ் பாஜி, நூடுல்ஸ் , ப்ரைட் ரைஸ் தான்

Update: 2022-09-23 07:45 GMT

பைல் படம்

இந்த உணவு வகைகள் ஆங்கிலத்தில் "ஜன்க் புட்" என்று அழைக்கப்படுகின்றன. இத்தகைய உணவு வகைகளில் ஒன்று கூட பயனுள்ள மற்றும் சத்துள்ள உணவுப் பொருள் கிடையாது என்பதை மாணவ சமுதாயம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். இவை பார்க்க நாகரிகமாகவும்,நாவிற்கு சுவையாகவும் இருக்கலாம். ஆனால் செரிமானம் ஆவது கடினம்; உடலுக்கு ஏற்படுத்தும் தீங்குகளும் ஏராளம். செரிமானம் ஆக அதிக நேரம் ஆவதோடு, நீண்ட நேரம் செரிமானப் பாதையில் தங்கிவிடுகின்றன. இதன் விளைவாய் *ACIDITY* எனும் அமிலச் சுரப்பு பிரச்சினை மூலம் நெஞ்சு எரிச்சல், முகப்பருக்கள், மந்தம், சோம்பல்.. போன்றவை ஏற்படுகின்றன. கவனிப்புத் திறன் குறையும். படிப்பு பாதிக்கும்.

அந்த உணவுகளில் சேர்க்கப்படும் பொருட்கள் தரமானவை அல்ல. அவற்றால் எந்த உயிர்ச்சத்துக்களும், கலோரிகளும் கிடைப்பதில்லை. மலச்சிக்கல் உண்டாகிறது. மாணவர்கள் இத்தகைய உணவுகளை காலை உணவாக அதிகம் உட்கொள்கிறார்கள். சில சமயங்களில் அவை ஜீரணமாகி விட்டாலும், சில சமயங்களில் பிரச்னையாகி விடுகின்றன. இதனால் அன்றைய முழு நாளும் அவஸ்தைப்பட வேண்டியுள்ளது.

தேர்வு நேரங்களில் மாணவர்கள் இது விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நமது பாரம்பரிய உணவுகளான இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, உப்புமா அல்லது சிறிதளவு சாதம் போன்றவையே பிரச்சினையற்ற உணவுகள். தேர்வு சமயங்களில் இவையே உகந்தவை. சத்து நிறைந்த கீரைகளும் காய்கறிகளும்,பழங்களும் அதிகம் சாப்பிட வேண்டும். தேர்வு சமயங்களில் படித்தலோடு சேர்ந்து, உணவு விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

Tags:    

Similar News