ஏஐடியூசி போக்குவரத்து ஓய்வூதியர் சங்கம் அறிவித்த தொடர் போராட்டம் வாபஸ்

போக்குவரத்து ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை ஆட்சியர் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக வட்டாட்சியர் உறுதியளித்தார்

Update: 2022-03-16 14:30 GMT

 தஞ்சை வட்டாட்சியர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்ற ஏஐடியுசி போக்குவரத்துக்கழக ஓய்வூதியர் சங்கத்தினர்

ஏஐடியூசி போக்குவரத்து ஓய்வூதியர் சங்கம் அறிவித்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தஞ்சை வட்டாட்சியர் முன்னிலையில் புதன்கிழமை நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சுமார் 85 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களின் குடும்ப உறுப்பினர்களாக பல லட்சம் பேர் உள்ளனர். இவர்களுக்கு அரசு பென்சன் கிடையாது . டிரஸ்ட் ஓய்வூதியம் மட்டும் தான் நடைமுறையில் உள்ளது .

இவர்களுக்கு கிடைக்கும் சொற்ப ஓய்வூதியத்தை கொண்டு குடும்பத்தை நடத்த இயலாத நிலையில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களுடைய தன்னலமற்ற உழைப்பால் போக்குவரத்துக் கழகம் ஆலமரமாக வளர்ந்து 50 ஆண்டு பொன்விழாவை கண்டுள்ளது. இந்த அடிப்படையில் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பழைய, புதிய அகவிலைப்படி உயர்வு கடந்த 2016 முதல் அறிவிக்கப்படாமல் 6 வருடமாக நிலுவையில் உள்ளதை உடன் அறிவிக்க வேண்டும்.

ஓய்வூதியத்துடன் இணைத்து உயர்த்தி வழங்குவதுடன் நிலுவைத் தொகை வழங்கிடவும், திமுக தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கடந்த 2008 -ஆம் ஆண்டு அரசு நியமித்த பென்ஷன் சீரமைப்பு குழு பரிந்துரை அடிப்படையில் டிரஸ்ட் ஓய்வூதியத்தை அரசு ஏற்று நடத்தவும், கடந்த 2020 மே மாதம் முதல் ஏறத்தாழ இரண்டு வருடங்களாக ஓய்வு பெற்றவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை தொகை உள்ளிட்டு எந்த விதமான ஓய்வு கால பணப்பலன்கள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும்.

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை அரசு போக்கு வரத்து கழகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற அலுவலர் களுக்கு வழங்கிடவும், கடந்த 2016 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வாரிசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தாமதமின்றி வாரிசு பணி ஆணை வழங்க வேண்டும்.

இருபது ஆண்டுகளுக்கு மேலாக வாரிசு பணிக்கு பதிந்து காத்திருப்பவர்களுக்கு ஆண்டுதோறும் வாரிசு பணி வழங்க வேண்டும். பொது மக்களுக்கு சிறப்பான முறையில் சேவை செய்து அகில இந்திய அளவில் தொடர்ந்து விருது பெற்று தமிழ்நாடு அரசுக்கு பெருமை சேர்த்து வரும் போக்குவரத்து கழகங்களுக்கு அன்றாடம் ஆகும் செலவினங்களின் தொகையை அரசு பொறுப்பேற்று அவ்வப்போது வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டு வரும் ஏஐடியூசி ஓய்வூதியர் தொழிற்சங்கம் சார்பில் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப் பட்டிருந்தது.

இந்த அறிவிப்பு தொடர்பாக 16.3.2022  தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா, அரசு விரைவு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் எஸ். பெருமாள், போக்குவரத்து சங்க மாநில துணைத் தலைவர் துரை. மதிவாணன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச்செயலாளர் பி.அப்பாத்துரை, துணை தலைவர் எஸ்.மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என்று வட்டாட்சியர் உறுதிமொழி அளித்த அடிப்படையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக ஏஐடியூசி ஓய்வூதியர் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News