தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது

தஞ்சை பெரியகோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்

Update: 2022-04-13 02:45 GMT

தஞ்சை பெரியகோவில் தேரோட்டம்

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் 18 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. விழாவினை முன்னிட்டு கோவிலில் காலை, மாலை சுவாமி புறப்பாடுகள் நடந்தன.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையடுத்து பெரியகோவிலில் இருந்த ஸ்ரீதியாகராஜர், கமலாம்பாள், ஸ்கந்தர் புறப்பாடும், முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்ச மூர்த்திகளும் புறப்படாகி, ஒன்றன் பின் ஒன்றாக மேலவீதியில் உள்ள தேர் மண்டப பகுதியை அடைந்தனர்.

இதையடுத்து 3 அடுக்குகள் கொண்ட 16.5 அடி உயரம் தேர் முழுவதும், 30 அடி உயரத்துக்கு அலங்காரம் செய்யப்பட்டும், 231 மர சிற்ப பொம்மைகளும் வர்ணம் பூசப்பட்டு ஜொலித்தன. இத்திருதேரில் தியாகராஜர் – கமலாம்பாள் எழுந்தருளினர்.

கடந்த இரண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக, தேரோட்டம் நடைபெறாத நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்துக்கொண்டு,தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

அஷ்தர தேவர், விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்கள் முன்னே செல்ல, தேருக்கு பின்னால், நீலோத்பலாம்பாள், சண்டீகேசுவரர் சப்பரங்கள் சென்றன. தேருக்கு முன்பாக பெண்கள் முளைப்பாரி எடுத்தும், கோலாட்டம், தப்பாட்டம் ஆடிச் சென்றனர். சிவ வாத்தியங்கள் முழங்கப்பட்டன.

மேல வீதியில், சந்து மாரியம்மன் கோயில், கொங்கணேஸ்வரர் கோயில், மூலை ஆஞ்சநேயர் கோயில், வடக்கு வீதியில் பிள்ளையார் கோயில் அருகில், இரத்தினபுரீஸ்வரர் கோயில், குருகுல சஞ்சீவி கோயில், கீழ வீதியில் கொடிமரத்து மூலை, விட்டோபா கோயில், மணிகர்ணிகேஸ்வரர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், தெற்கு வீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோயில், கனரா வங்கி பிள்ளையார் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், காளியம்மன் கோயில் ஆகிய 14 இடங்களில் பக்தர்கள் வசதிக்காகவும், சுவாமி தரிசனத்துக்காகவும், தேங்காய், பழம் படைப்பதற்காகவும் திருத்தேர் நிலை அமைக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு இடங்களிலும் தன்னார்வலர்கள் தண்ணீர் மற்றும் நீர் மோர் பந்தல்கள் அமைத்து இருந்தனர்.

Tags:    

Similar News