மாநகராட்சி கடைகள் ஏலம்: ஒத்திவைக்க தஞ்சை வர்த்தக கூட்டமைப்பு கோரிக்கை

திருநெல்வேலி, திருச்சி மாநகராட்சிகளில் வணிகம் செய்தவர்களுக்கே மீண்டும் கடை ஒதுக்கியதைப் போல் இங்கும் ஒதுக்க வேண்டும்

Update: 2021-08-11 07:25 GMT

மாநகராட்சி நிர்வாகம்  கடைகள் இன்று ஏலம் விடுவதை,  நீதிமன்ற உத்தரவு வரும் வரை ஒத்திவைக்க வேண்டும் என தஞ்சை பழைய பேருந்து நிலையம் வர்த்தக கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சை மாநகரில் பழைய பேருந்து நிலையம், திருவையாறு பேருந்து நிலையம், சரபோஜி மார்க்கெட், காமராஜ் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வணிகர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் இடிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வரும் நிலையில், ஏற்கெனவே இங்கு வணிகம் செய்த வணிகர்களுக்கு மீண்டும் கடை ஒதுக்க வேண்டுமென வணிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், மாநகராட்சி சார்பாக இன்றைய தினம்  தினம் தஞ்சை பழைய பேருந்து நிலையம் மற்றும் திருவையாறு பேருந்து நிலையத்தில் உள்ள 96 கடைகள் திறந்தவெளி ஏலம் விடப்பதுன் என்று  அறிவித்துள்ளது.   இதற்கு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வழக்கு நிலுவையில் உள்ள போது, மாநகராட்சி நிர்வாகம் ஏலம் விடுவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.

ஏலத்திற்கு நீதிமன்றம் தடையாணை வழங்கவில்லை என்றாலும், கடை ஒதுக்குவதற்கு இரண்டு வார காலம் அவகாசம் கொடுத்துள்ளது. ஏற்கெனவே, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட மாநகராட்சிகளில் வணிகம் செய்த வணிகர்களுக்கே மீண்டும் கடை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தங்களுக்கும்  ஏலம் விடாமல் மீண்டும் கடைகளை ஒதுக்க வேண்டும்.. எனவே  மாநகராட்சி நிர்வாகம் பொது ஏலம் விடுவதை கைவிட வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags:    

Similar News