நான் முதல்வன் திட்டம்: 290 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்பு

அனைத்து அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11 , 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2022-12-07 09:45 GMT

தஞ்சாவூர் மாரியம்மன் கோயில்  அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நான் முதல்வன் திட்ட வழிகாட்டி முகாமில் பங்கேற்ற  மாணவ, மாணவிகள்.

தமிழக அரசின் நான் முதல்வன் சிறப்புத்திட்டத்தின் படி அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அளிப்பதற்கு ஏதுவாக ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டும் ஆலோசனை மையம் உருவாக்கப்பட்டு இதற்கென தனியே கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு மாணவர்களுக்கு முறையாக கொண்டு சேர்ப்பதற்கு ஏதுவாக தொடர் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கென மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கபட்டுள்ளது.

கடந்தஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி தொடராத மாணவர்களைக் கணக்கிட்டு, அதற்குரிய காரணத்தைக் கண்டறிந்து, அதனைக் களைந்து அவர்கள் உயர்கல்வி தொடர்ந்திட தேவையான வழிகாட்டுதல்கள் மாணவர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டது.

2020-21 மற்றும் 2021-22 ஆம் கல்வியாண்டில் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு HCL தொழில் நுட்ப நிறுவனம் TECH BEE EARLY CAREER TRAINING PROGRAM மூலம் பயிற்சி அளித்து முழுநேர பணிவாய்ப்பு மற்றும் உயர்கல்விவாய்ப்பினை வழங்குகிறது. இதற்குரிய முகாம் தென்கீழ் அலங்கம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 290 பள்ளிகளைச் சார்ந்த 64098 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் உயர்க்கல்வி வாய்ப்புகள், தொழிற் கல்வி வாய்ப்புகள் மற்றும் பயிற்சிகள் குறித்து வழி காட்டுதல்கள் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியினை  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் நேரில் பார்வையிட்டனர் என  தஞ்சை   மாவட்டஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  தகவல் தெரிவித்தார்.

நான் முதல்வன் திட்டம் என்றால் என்ன... இந்த திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய முதலமைச்சர், 'நான் முதல்வன்' திட்டம் என் கனவு திட்டம் என்றார். மாணவர்கள், இளைஞர்களை முதல்வனாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாக 'நான் முதல்வன்' என்கிற புதிய திட்டம் அமைந்துள்ளது. 'நான் முதல்வன்' திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும்.இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது ஆகும்.

மாணவர்கள் அடுத்தடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்றும் வழிகாட்டப்படும். தமிழில் தனித் திறன் பெற சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும், நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும்.தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு Coding, Robotics போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த சாதனையாளர்களைக் கொண்டு கோடை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.

மனநல மருத்துவர்கள், உடல்நல மருத்துவர்களைக் கொண்டு திடமான உணவு வகைகள் உட்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்குவதுடன், உடற்பயிற்சி, நடை, உடை, நாகரீகம், மக்களோடு பழகுதல், ஆகியவை குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும். தமிழ்ப் பண்பாடு, மரபு குறித்த விழிப்புணர்வும் மாணவ, மாணவியர்களிடம் ஏற்படுத்தப்படும். இதற்கான பயிற்சிகள் அனைத்தும், தலைசிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு நேரடிப் பயிற்சி, இணைய வழிப் பயிற்சி, அவரவர் கல்லூரியில் பயிற்சி, மாவட்ட ரீதியாக பயிற்சி எனத் தேவைக்கேற்ப பயிற்சிகள் அளிக்கப்படும்.

ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டி ஆலோசனை மையம் உருவாக்கப்படும். இதற்கென தனியே கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தொடர் வகுப்புகள் நடத்தப்படும்.முன்னாள் மாணவர்களைக் கொண்டு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தொடர் நெறிப்படுத்தும் (mentoring) முறையும் அறிமுகப்படுத்தப்படும்.கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்யை உறுதி செய்ய அவரவர் விருப்பத்திற்கேற்ப அயல்நாட்டு மொழிகள் (Foreign Language) கற்பிக்கப்படுவதற்கு இத்திட்டத்தில் வழிவகை செய்யப்படும். அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் Industry 4.0 தரத்திற்கு உயர்த்தப்படும்.

மாணவ, மாணவியர்களின் தகுதி மற்றும் ஆர்வத்திற்கு ஏற்ப, நாட்டின் தலைசிறந்த நிறுவனங்கள்/புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் / திறன் மேம்பாட்டு நிறுவனங்களில் சேர்க்கையையும் இந்த தொடர் பயிற்சிகள் மூலம் உறுதி செய்யப்படும். தமிழ்நாடு அரசுத்துறை மற்றும் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள், மத்திய அரசின் வேலைவாய்ப்புகள், பிற மாநிலங்களின் வேலைவாய்ப்புகள் ஆகிய அனைத்தும் இத்திட்டத்தின் கீழ் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டு, பயிற்சிகள் ஒருங்கிணைக்கப்படும்.பயிற்சி பெற்ற பயனாளிகள் வேலைவாய்ப்பு பெறுவதையும், அதைத் தொடர்வதையும், தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதைத்தவிர, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம்களும் தேவைகளின் அடிப்படையில் நடத்தப்படும். இத்திட்டத்தின் அனைத்து விவரங்களும் அடங்கிய வலைதள பலகை (Portal) உருவாக்கப்படும்.

Tags:    

Similar News