தஞ்சையில் தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியவர் மீது வழக்கு பதிவு

தஞ்சையில் கொரோனா தடுப்பூசி குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Update: 2021-04-21 13:45 GMT

தஞ்சாவூர்-, நாகப்பட்டினம் புறவழிச்சாலையில் உள்ள அழகரசன் நகரைச் சேர்ந்தவர் இந்திரமோகன். இவர் தஞ்சாவூர் மேல வீதியில் உள்ள பஜாஜ் நிதிநிறுவனத்தில் கலெக்சன் மேனேஜராக பணிபுரிந்து வந்தார். அவர் அந்நிறுவனத்தில் கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.

இந்திரமோகன் ஏப்ரல் 17-ம் தேதியன்று (சனிக்கிழமை) காலை வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இவருக்கு கோப்பெருந்தேவி என்ற மனைவி, தேவ் என்ற 7 மாத குழந்தை உள்ளனர்.

இந்நிலையில், இந்திரமோகன் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாகவும், எனவே, தற்போதுள்ள சூழ்நிலையில் யாரும் தடுப்பூசி போட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டு முகநூல் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் ஒரு பதிவு வெளியாகி, வைரலானது.

'சின்ன கலைவாணர்' என போற்றப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக் கரோனா தடுப்பூசி போட்டதற்கு மறுநாள் மாரடைப்பு காரணமாக இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக பொதுமக்களிடையே ஒருவித தயக்கம், அச்ச உணர்வு இருந்து வருகிறது.

நடிகர் விவேக் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், தடுப்பூசி போடுவதால் எந்தவொரு பக்கவிளைவுகளும் ஏற்படாது என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், பஜாஜ் நிதிநிறுவன கலெக்சன் மேனேஜர் இந்திரமோகன் கரோனா தடுப்பூசி போட்டதற்கு மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி வைரலானதைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே இது ஒரு மிகப் பெரிய விவாதப் பொருளானது.

இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் உத்தரவின்பேரில், வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவ் விசாரணையில், மாரடைப்பால் இறந்த இந்திரமோகன் தடுப்பூசி போட்டுக்கொள்ளவே இல்லை என்ற உண்மை தெரிய வந்தது.

இதையடுத்து, கோட்டை பள்ளியக்ரஹாரம் கிராம நிர்வாக அலுவலர் எம். கோகிலா அளித்த புகாரின் பேரில், தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய போலீஸார் கரோனா தடுப்பூசி குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறான செய்தி பரப்பிய அடையாளந் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News