ஆன்லைன் ரம்மியை தடை செய்ய கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தினால் இதுவரை தமிழ்நாட்டில் 33 பேர் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்

Update: 2022-12-13 13:00 GMT

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாநிலந்தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சையில் நடைபெற்றது.

மனித உயிர்களை பழிவாங்கிய ஆன்லைன் ரம்மியை தடை செய்ய கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாநிலந்தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சையில் இன்று நடைபெற்றது.

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தினால் இதுவரை தமிழ்நாட்டில் 33 பேர் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மனித உயிர்களை பழிவாங்கும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டி தமிழ்நாட்டில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் கண்டனங்களும் எழுப்பப்பட்டன. இதன் விளைவாக தமிழ்நாடு அரசு ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் அவசர சட்டத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் இந்த தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வருவதைக் கண்டித்தும், உடனடியாக ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வலியுறுத்தியும். ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம் கொண்டு வரவும் வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாநிலந் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக தஞ்சை ரயிலடி முன்பு  நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் மருத்துவர் ச.சுதந்திர பாரதி தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர்கள் கருப்பையா,வாசன் துணை தலைவர் பிரபாகரன், நிர்வாககுழு உறுப்பினர் மணிகண்டன் பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் க.காரல் மார்க்ஸ், முன்னாள் நிர்வாகிகள் கோ.சக்திவேல், பூபேஷ் குப்தா கண்டன உரையாற்றினர்கள். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News