தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை ரூ.4500 கோடிக்கு விற்பனையா..?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை ரூ.4500 கோடிக்கு விற்பனை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.

Update: 2023-06-22 13:22 GMT

ஸ்டெர்லைட் ஆலை.(கோப்பு படம்)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை ரூ.4500 கோடிக்கு விற்பனை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் என்ற பெயரில் தாமிர உருக்காலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் சுகாதார கேடு ஏற்படுவதாகவும், நச்சு காற்றின் காரணமாக அதனை   சுவாசிப்பவர்களுக்கு புற்று நோய் ஏற்பட்டதாகவும் கூறி அந்த ஆலையை மூடவேண்டும் என  சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிறுவனத்துக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மிகப்பெரிய அளவில்  போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையின் தாய் நிறுவனமான வேதாந்தா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வரும் ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 5 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை 4,500 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வதாக வேதாந்தா நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால், ஆலையை யாரும் வாங்க முன்வராத நிலையில், தற்போது மீண்டும் ஆலையை விற்பனை செய்வதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.

கடனில் தத்தளித்து வரும் வேதாந்தா நிறுவனம், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விற்பதன் மூலம் திரட்டப்படும் தொகை, இந்த ஆண்டுக்கான அதன் மூலதனச் செலவுகளை ஈடுகட்ட உதவும் என்று வங்கி வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல்கள் பரவி வருகிறது.

Tags:    

Similar News