இராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்த சம்பவம் மீனவ கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

Update: 2022-02-08 10:45 GMT

ராமேஸ்வரம் மீனவர்கள்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களையும் அவர்களது மூன்று விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணைக்காக மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விசாரணைக்குப் பின் யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுவார்கள் என எதிர்பார்கப்படுகிறது.

இராமநாதபுரம் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜனவரி மாதம் 31ஆம் தேதி நள்ளிரவு நாகப்பட்டினத்தை சேர்ந்த இரண்டு விசைபடகுகளை நடுக்கடலில் சுற்றிவளைத்து சிறை பிடித்த இலங்கை மீனவர்கள் அதிலிருந்த 21 மீனவர்களையும் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்து பின் சிறையில் அடைத்தனர்.இலங்கை கடற்படை மற்றும் இலங்கை மீனவர்களின் தொடர் பிரச்சனை மற்றும் கைது நடவடிக்கைக்கு அஞ்சி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 6 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.இதனிடையே நேற்று காலை மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று ராமேஸ்வரத்தில் இருந்து 300க்கும் குறைவான விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

மீனவர்கள் கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தங்கச்சிமடத்தை சேர்ந்த வின்னரசன்,சேவியர் மற்றும் ராபின் என்பவருக்கு சொந்தமான மூன்று விசைப்படகுகளையும் அதிலிருந்த 16 மீனவர்களையும் கைது செய்து மயிலட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணைக்கு பின்னர் மீனவர்களை யாழ்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க சென்ற 43 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த மீனவர்களை கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி இலங்கை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தற்போது வரை மீனவர்கள் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டாத சூழ்நிலையில்,  நேற்று நள்ளிரவு மீண்டும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்த சம்பவம் ராமேஸ்வரம் சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News