தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த படகுகளின் வலைகள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த 4 விசைப்படகின் வலைகளை மீன் வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

Update: 2022-02-02 10:15 GMT

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள்

தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த நான்கு விசைப் படகில் இருந்த மீன்பிடி வலைகள் நடுக்கடலில் வைத்து இராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழக மீன்வளத்துறையால் தடை செய்யப்பட்ட வலைகளான இரட்டை மடி, சுருக்குமடி, நைலான் மடி, மற்றும் அதிக குதிரை திறன் கொண்ட எஞ்சின்கள் பொருத்தப்பட்ட விசைப்படகுகளை தமிழக கடற்கரை பகுதிகளில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறி, இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம், பாம்பன் பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி வருவதாக மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது.

இதனையடுத்து, நேற்று இரவு ராமநாதபுரம் மீன்வளத்துறை இணை இயக்குனர் காத்தவராயன் உத்தரவின்பேரில், இராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவ. ராமச்சந்திரன் மற்றும் இராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு, மன்னார் வளைகுடா மற்றும் பாக்-ஜலசந்தி கடல் பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த படகுகளை சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட இரட்டைமடி பயன்படுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து, மீன்பிடித்த மண்டபம் மற்றும் பாம்பன் பகுதியைச் சேர்ந்த நான்கு விசைபடகுகளில் இருந்த தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பறிமுதல் செய்த இராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட படகுகள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை முடியும் வரை மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசல் இந்த படகுகளுக்கு நிறுத்தப்படுகிறது. தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.  தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க வேண்டாம் எனவும் மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழக மீன் வளத்துறை உத்தரவு மீறி தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Tags:    

Similar News