இராமேஸ்வரம் மீனவர்கள் 2 வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 2 வது நாளாக ஸ்டிரைக் தொடருவதால் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

Update: 2021-12-21 17:23 GMT

ராமேஸ்வரத்தில்  விசைப்படகுகள் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. 

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த இரண்டு நாட்களில் 69 தமிழக மீனவர்களும் 10 மீன்பிடி விசைப்படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யபட்டுள்ளனர். மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பாததால் மீனவ கிராமங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளது.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 55 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கைது நடவடிக்கைக்கு கண்டித்து நாளை தங்கச்சிமடத்தில் மீனவர்களின் குடும்பத்தினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர்.

கடந்த சனிக்கிழமை காலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்கள் தனுஷ்கோடிக்கு நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன் பிடித்ததாக மீனவர்கள் 43 பேரையும், அவர்களது 6 மீன் பிடி விசைப்படகுகளையும் கைது செய்து வரும் 31-ஆம் தேதி வரை யாழ்பாணம் சிறையில் அடைத்தனர்.

இதேபோல் மண்டபத்திலிருந்து ஞாயிற்றுகிழமை காலை மீன் பிடிக்கச் சென்ற 12 மீனவர்களையும் அவர்களது இரண்டு படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து வரும் ஜனவரி மாதம் 3ந்தேதி வரை மன்னார் வவுனியா சிறையில் மீனவர்களை தடுத்து வைத்துள்ளனர். இந்த கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முதல் சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலை செய்யும் வரை வேலைநிறுத்தப் போராட்டத்தை துவங்கி இன்று இரண்டாவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் ராமேஸ்வரத்தில் உள்ள சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. மீனவர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக நேரடியாக 50 ஆயிரம் மீனவர்களும் மறைமுகமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய கோரி நாளை காலை ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள அனைவரும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவதுடன் தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 14மீனவர்களையும் இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை கைது செய்து மயிலட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். கடந்த இரண்டு நாட்களில் தமிழகத்தைச் சேர்ந்த 69 மீனவர்களையும் 10 விசைப்படகுகளையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News