இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் இந்திய மருத்துவகவுன்சில் ஆய்வு

கடந்த ஆண்டு மார்ச்.1 -இல் அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி ரூ.345 கோடியில் பணிகள் முடியும் நிலையில் உள்ளது

Update: 2021-08-11 10:30 GMT

இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் கட்டுமான பணிகளையும் அடிப்படை வசதிகளையும் அகில இந்திய மருத்துவ கவுன்சில் உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.

இராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில், வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்குவது குறித்து இந்திய மருத்தவ கவுன்சில் குழு இராமநாதபுரத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1-ஆம் தேதி  இராமநாதபுரத்தில் புதிய மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு  அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.345 கோடியிலான இந்த மருத்துவ கல்லூரி பணிகள் தற்போது முடிவு பெறும் நிலையில் உள்ளது.

இராமநாதபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி கட்டிடமும், இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மருத்துவ கல்லூரி நிர்வாக அலுவலகம் மற்றும் மாணவ, மாணவியர் விடுதி கட்டிடமும் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆராய்ந்து மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிப்பதற்காக, இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் 4 பேர் அடங்கிய குழு, இரமநாதபுரத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

ஒரு குழுவினர் மருத்துவமனையிலும், மற்றொரு குழுவினர் மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா,  வரும் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப புதிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறதா, தற்போதைய டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் எண்ணிக்கை, தேவைப்படும் பணியாளர் எண்ணிக்கை உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில்,  இராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு, அனுமதி வழங்கப்படும் என ஆய்வு நடத்திய இந்திய மருத்தவ கவுன்சில் குழுவினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News