முழு ஊரடங்கால் முடங்கியது ராமேஸ்வரம்: சுற்றுலா கடைகள் வேலை இழப்பு

ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகள் நம்பி வாழ்ந்து வரும் ஆயிரகணக்கானோர் வேலை இழந்து வாடினர்.

Update: 2022-01-16 17:45 GMT

வெறிச்சோடி காணப்படும் ராமேஸ்வரம் கோயில் வீதி.

இராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் மிக முக்கிய சுற்றுலாத்தலம்  என்பதால் வார விடுமுறை நாட்களில் தமிழகம் மட்டும் அல்லாது வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரகணக்கான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வாகனங்களில் ராமேஸ்வரம் வருவது வழக்கம். ஆனால் இன்று முழு ஊரடங்கால் ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் ராமேஸ்வரத்தின் முக்கிய பகுதிகளான திட்டகுடி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் நான்கு ரத வீதிகளில், கடற்கரை, உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டம்மின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வருபவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக செல்பவர்கள் மட்டும் போலீசாரால் அனுமதிக்கப்படுகின்றனர். இன்று காணும் பொங்கல் என்பதால் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கடற்கரையில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்துடன் கூடுவது வழக்கம்.

ஆனால் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக தனுஷ்கோடி, அரியமான், சீனியப்பா தர்கா, காரங்காடு உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் மக்கள் செல்லாமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. வார விடுமுறை நாட்களில் கூட்டநெரிசலுடன் காணப்படும் ராமேஸ்வரம் முக்கிய சுற்றுலா பகுதிகள் இன்று ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை நம்பி ராமேஸ்வரத்தில் வாழ்ந்து வரும் ஆயிரகணக்கானோர் வேலை இழந்து வருவாய் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News