இராமநாதபுரத்தில் மாவட்ட மாணவர் விளையாட்டு விடுதி கட்டும் பணி மந்தம்

இராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாணவர்களுக்கான விடுதி கட்டும் பணி மந்தமாக நடைபெற்று வருகின்றது.

Update: 2022-04-16 03:52 GMT
இராமநாதபுரத்தில் மாவட்ட மாணவர்  விளையாட்டு விடுதி கட்டுமான பணி பாதியில் நிற்கிறது.

இராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாணவர்களுக்கான விடுதி கட்டும் பணி மந்தகதியில் நடக்கிறது. சமையல் அறை, கழிப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படவில்லை. இந்த விளையாட்டு அரங்கத்திலுள்ள தடகள போட்டிகளுக்குரிய மைதானத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மாவட்ட, மாநில அளவில் சாதனை படைத்த வீரர்கள் தினமும் பயிற்சிக்கு வருகின்றனர். வாலிபால், கால்பந்து, ஹாக்கி, கபடி, கிரிக்கெட், இறகுபந்து உள்ளிட்ட குழு விளையாட்டுகளுக்கும் இங்கு பலர் பயிற்சி பெறுகின்றனர். இங்கு ஊரக வளர்ச்சிதுறை சார்பில் 2019---2020 நிதியாண்டில் ரூ. 15 லட்சத்தில் சமையல் அறை, ரூ.9.35 லட்சத்தில் கழிப்பறை கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. ரூ.35 லட்சத்தில் மாணவர்கள் தங்கும் விடுதியை செப்பனிட்டு, புதிய கட்டடம் கட்டும் பணியும் மிக மந்தமாக நடக்கிறது.

இதனால் மாணவர்கள் தற்போது ஹாக்கி மைதான கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விடுமுறை காலமான மே, ஜூனில் அதிகளவில் மாணவர்கள் இங்கு பயிற்சி பெற வருவர். சமையலறை, கழிப்பறையை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், விடுதி கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், ''விடுதி கட்டுமான பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஓரிரு மாதங்களில் முடியும். சமையலறை, கழிப்பறையை திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Tags:    

Similar News