இராமநாதபுரம் வாரச்சந்தை இன்று முதல் துவங்கியுள்ளது.

இராமநாதபுரம் நகர் பகுதியில் வாரச்சந்தை இன்று முதல் துவங்கியுள்ளது.

Update: 2021-07-07 14:56 GMT

இராமநாதபுரத்தில் வாரச்சந்தை இன்று முதல் செயல்படத் தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகம் முழுவதும் வெகுவேகமாகப் பரவி அதிகமான உயிர் பலியையும் ஏற்படுத்தியது. கொரோனா நோய்தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதன்படி, பொதுப் போக்குவரத்து, அனைத்து வியாபார நிறுவனங்கள், சந்தைகள், வழிபாட்டு தலங்கள் உள்பட பல்வேறு செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியதால் தமிழக அரசு ஒவ்வொரு வாரமும் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 5 -ஆம் தேதி முதல் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. இதில், வாரச்சந்தைகளும் சமூக இடைவெளியுடன் அரசின் வழிகாட்டு விதிமுறைகளின்படி நடத்தலாம் என அனுமதிக்கப்பட்டது. ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் வாரம்தோறும் நடைபெறும் வாரச்சந்தை இன்று தொடங்கப்பட்டது.

இந்த சந்தையில் வெளி மாவட்டங்களில் இருந்தும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள், கோழி,ஆடு, மற்றும் கருவாடு உள்ளிட்ட உணவுப்பொருள்களை கொண்டுவந்து.விற்பனை செய்வது வழக்கம். கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பின்னர் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி கூடிய இந்த வாரச் சந்தையில் முதல் நாளில் வாடிக்கையாளர்களின் வருகை சற்று குறைவாகவே காணப்பட்டது.

மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்து வருவது போன்ற செயல்பாடுகளை காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் கண்காணித்தனர். மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் வெகுவாக குறைந்து வருகிறது நேற்று மாவட்டத்தில் 17 நபர்கள் பாதிக்கப்பட்டனர். நேற்றுவரை மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 150 ஆகவும் இருக்கிறது.

அரசின் தளர்வுகளை கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பொது வெளியில் மக்கள் நடந்து கொள்வதைப் பொருத்தே தொற்று எண்ணிக்கை அதிகரிக்குமா அல்லது குறையுமா என்பது வரும் நாள்களில் தெரிய வரும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News