கச்சத்தீவு ஆலய திருவிழாவில் பங்கேற்க இலங்கை அரசு திடீர் தடை

கச்சத்தீவு ஆலய திருவிழாவில் பங்கேற்க ஈழத்தமிழர்கள்,தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கும் இலங்கை அரசு திடீர் தடை விதித்துள்ளது.

Update: 2022-02-18 05:55 GMT

கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழா ஆண்டு தோறும் மார்ச் மாதத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் பங்கேற்று வந்தனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவை காரணம் காட்டி இந்த திருவிழாவில் இருநாட்டு தமிழர்களும் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி மறுத்து வந்தது. இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் 11, 12ம் தேதிகளில் அந்தோணியார் தேவாலய திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழாவில் தமிழக பக்தர்களை பங்கேற்க அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார். இதனையடுத்து தமிழக பக்தர்களை பங்கேற்க அனுமதி பெற்றுத்தர வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தார். இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. நேரிலும் சந்தித்து பேசினார். இதனையடுத்து 200 தமிழக பக்தர்கள் அனுமதிக்கப்படலாம் என இலங்கை தரப்பில் தகவல்கள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் கச்சத்தீவு திருவிழா தொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்றார். இக்கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டக்ளஸ் தேவானந்தா, இம்முறையும் தமிழகம், இலங்கை மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க அதிபர் கோத்தபாய ராஜபக்சே தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார் என தெரிவித்தார். மேலும் யாழ். மறைமாவட்ட ஆயர்கள் மட்டுமே கச்சத்தீவுக்கு சென்று தேவாலயத்தில் பிரார்த்தனை நடத்துவர் எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இது தமிழகம், ஈழத் தமிழ் மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News