புதுக்கோட்டை நகராட்சி தலைவர் பதவியை பிடிக்க போவது யார்

திமுக தலைமை யாரை சுட்டிக்காட்டுகிறதோ அவர் போட்டியின்றி தலைவராகத் தேர்வு செய்யப்படுவார் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்

Update: 2022-02-23 09:00 GMT

புதுக்கோட்டை நகர்மன்றத்தலைவர் பதவிக்கான பந்தய களத்தில் நிற்கும் திமுக பெண் கவுன்சிலர்கள்.

நூற்றாண்டு கண்ட பழமையான புதுக்கோட்டை நகராட்சியில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் குதிரை பேரத்துக்கு வழியில்லாத வகையில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில்,  நகர்மன்றத் தலைவர் பதவியை அலங்கரிக்கப் போகும்  இரண்டாவது பெண் தலைவர்  யார்? என்பது இலைமறை காயாக இருக்கிறது. ஆனால் தலைவர் பதவியை பிடிப்பதற்கான பந்தயக்களத்தில் வெற்றி பெறும் முனைப்பில்  சில முக்கியமான  பெண் கவுன்சிலர்கள் இருப்பது மட்டும் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.

புதுக்கோட்டை நகராட்சி என்பது மிகவும் பழமையான நகராட்சி ஆகும் நூறு ஆண்டுகளைக் கண்டு தற்போது 108 ஆவது ஆண்டை கடந்து கம்பீரமாக  நடைபோட்டுக் கொண்டு வருகிறது புதுக்கோட்டை நகராட்சி. 

புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளன. தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதுக்கோட்டை நகராட்சியில் 24 வார்டுகளில் திமுக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பலத்துடன்  உள்ளது. அதிமுக 8 இடங்களிலும் காங்கிரஸ் மூன்று இடங்களிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு இடத்திலும் சுயேச்சைகள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டை நகராட்சியில் இதுவரை ஒரு பெண் தலைவர் மட்டுமே இருந்துள்ளார்.  கடந்த 2004ஆம் ஆண்டு திமுகாவை சேர்ந்த ராமதிலகம் என்பவர் நகர்மன்ற  பெண் தலைவராக  பதவி வகித்தார்.  தற்போது புதுக்கோட்டை நகராட்சித் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

திமுக தனிப்பெரும்பான்மையுடண் வெற்றி பெற்ற நிலையில் திமுக வெற்றி பெற்ற 24 கவுன்சிலர்கள் 13 பெண் கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.தற்போது நகராட்சித் தலைவர் பதவியைப் பிடிப்பதற்காக பல பெண் கவுன்சிலர்கள் தயாராகி வருகின்றனர்.

இதில், புதுக்கோட்டை மாவட்ட திமுக பொருளாளர் இருக்கும் செந்தில் மனைவி திலகவதி. மாவட்ட  நெசவாளர் அணை அமைப்பாளராக இருக்கும் எம்.எம்.பாலு மனைவி செந்தாமரை, மூன்று முறை திமுக கவுன்சிலராக இருந்த அறிவுடைநம்பி மனைவி அனுராதா,  மகளிரணி பொறுப்பாளராக இருக்கும் ராஜேஸ்வரி மற்றும் மாவட்ட இலக்கிய அணியில் உள்ள சாத்தையா மனைவி வளர்மதி ஆகியோர் தலைவர் பதவியைப் பிடிப்பதற்கான பந்தயகளத்தில்  உள்ளனர.

வரலாற்று சிறப்புமிக்க புதுக்கோட்டை நகராட்சியின் இரண்டாவது பெண் தலைவர் பதவியை களத்தில் இருக்கும் இந்த ஐந்து பேரில் ஒருவர்  பிடிப்பாரா  அல்லது  வேறு  யாராவது ஒருவரை கட்சித் தலைமை கைகாட்டப் போகின்றதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .  இதனிடையே,  சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி,  கட்சித் தலைமை யாரை கை காட்டுகிறதோ, அவர்கள்தான் தலைவர்  மற்றும் துணைத்தலைவர் பொறுப்பிற்கு வருவார்கள். அதுவும் போட்டியின்றி  தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற கருத்தை தெரிவித்திருப்பது மறைமுகத் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News