தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணி நியமன ஆணையை திரும்ப வழங்க கோரிக்கை

பணி நியமன ஆணை வழங்கிய 2 மணி நேரத்தில் தேர்தலை காரணம் காட்டி பணி நியமன ஆணைகளை உடனடியாக திரும்பப் பெற்றனர்

Update: 2022-03-07 01:15 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட்டவர்கள்  ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு முறையிட்டனர்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தேர்வான உதவியாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணையை திரும்பப் பெற்றதால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு முறையிட்டனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு உதவியாளர்கள் தேவை என நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.அதனடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து பலர் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து அரசு அதிகாரிகளால் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு பலரை தேர்வு செய்து அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிலையில் பணி நியமன ஆணைகளை வழங்கிய இரண்டு மணிநேரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி தேர்வானவர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணைகளை உடனடியாக திரும்பப் பெற்றனர்.மேலும் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு தேர்வான உதவியாளரிடம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் உங்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று கூறி அனுப்பி வைத்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்ற பிறகும் இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தேர்வான பணியாளர்களிடமிருந்து திரும்பப் பெற்ற பணி நியமன ஆணைகளை இது வரை அவர்களுக்கு வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு உதவியாளர்களாக தேர்வானவர்கள் மாவட்ட ஆட்சியரிடமும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளையும் நேரடியாக சந்தித்து தங்களுக்கு மீண்டும் பணி நியமன ஆணைகளை வழங்குமாறு பல்வேறு மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு தேர்வாகி பணி நியமன ஆணைகளை திரும்பப் பெற்றவர்களுக்கு மீண்டும் அந்த ஆணையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரி பாதிக்கப்பட்டவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த திருக்கோகர்ணம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து அனைவரும் திரும்பிசென்றனர்.

Tags:    

Similar News