புதுக்கோட்டை நகராட்சி நகர் மன்ற திலகவதி செந்தில்குமார் தேர்வு

புதுக்கோட்டை நகராட்சி நகர் மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த திலகவதி செந்தில்குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்

Update: 2022-03-04 07:15 GMT

புதுக்கோட்டை நகராட்சி நகர்மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த திலகவதி செந்தில்குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சிகள் 8 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடைபெற்று கடந்த 22ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. மாவட்டத்தில் 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளில் 28 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளும் 5 வார்டுகளில் சுயேச்சைகளும் ஒரு வார்டில் அமமுகவும் மற்றும் 8 வார்டுகளில் அதிமுகவும் வெற்றி பெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கடந்த 2 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.  புதுக்கோட்டை நகராட்சிக்கு நகர்மன்ற தலைவர் பதவிக்கு 25 வது வார்டில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் திலகவதி செந்தில்குமாரை தலைவர் பதவிக்கும் 17 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற லியாகத் அலியை துணைத் தலைவர் பதவிக்கும் திமுக தலைமை கழகம் வேட்பாளராக அறிவித்தது.

இந்நிலையில் இன்று புதுக்கோட்டை நகராட்சியில் நகர் மன்ற தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் தேர்தல் நடத்தும் அலுவலர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.  இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுக உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும், சுயேச்சை உறுப்பினர்களும் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற ஒரு வேட்பாளரும் என மொத்தம் 34 நகர்மன்ற உறுப்பினர்கள் மறைமுக தேர்தலில் கலந்து கொண்டனர். அதிமுக கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் யாரும் மறைமுக தேர்தலில் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் 9.30 மணிக்கு நகர மன்ற கூட்ட அரங்கில் நகர்மன்ற தலைவர் பதவிக்கு திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட திலகவதி செந்தில்குமார் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாமல் அனைவரும் ஒருமனதாக திலகவதி செந்தில்குமாரை ஆதரித்து நகர்மன்ற தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுத்தனர்.

இதையடுத்து நகர்மன்ற தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திலகவதி செந்தில்குமார் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் நாகராஜன் அறிவித்து அதற்கான சான்றிதழை வழங்கினார்.

தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட திலகவதி செந்தில்குமாருக்கு அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

முன்னதாக புதுக்கோட்டை நகர் மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் திலகவதி செந்தில்குமார், திமுக உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மேளதாளத்துடன் நகராட்சிக்கு ஊர்வலமாக வந்தார்.

மேலும் புதுக்கோட்டை நகராட்சி நகர் மன்ற துணை தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று மதியம் 2.30 மணி அளவில் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News