மைனர் பெண்ணை திருமணத்துக்காக கடத்திச்சென்ற வாலிபருக்கு 17 ஆண்டுகள் சிறை

இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது

Update: 2021-09-03 15:08 GMT

மைனர் பெண்ணை கடத்திய வழக்கில்புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தால் 17 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட இளைஞர் ரஞ்சித்குமார்

புதுக்கோட்டை அருகே 17 வயது சிறுமியை காதலிப்பது போல் நடித்து,  கடத்திச்சென்று திருமணம் செய்ய முயற்சி செய்த ரஞ்சித்குமார்(23) என்ற இளைஞருக்கு, 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், பி .மேட்டுபட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் ( 23). இவரும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 18-06-2020 அன்று வீட்டை இருவரும் விட்டு வெளியேறி, திருமணம் செய்து கொள்வதற்கு தயாராக இருந்தனர். ஆனால், பெண்ணின் பெற்றோர் இருவரையும் தேடி கண்டுபிடித்து தங்களது பெண்ணை மீட்டனர்.

இதையடுத்து, மைனர் பெண்ணை கடத்தியதாக பெண்ணின் பெற்றோர், ரஞ்சித் குமார் மீது, கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ்,  ரஞ்சித் குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா, மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்துகொள்ள முயன்ற குற்றத்துக்காக 17 ஆண்டுகள் சிறை தண்டனையும்,  1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ 2 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ரஞ்சித்குமார், திருச்சி மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் போலீஸார் கொண்டு சென்றனர்.


Tags:    

Similar News