வீட்டின் பூட்டை உடைத்து 75 பவுன் நகை, சி.சி.டி.வி. ஹார்ட் டிஸ்க் கொள்ளை

புதுக்கோட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 75 பவுன் நகை சி.சி.டி.வி. ஹார்ட் டிஸ்க் கொள்ளையடிக்கப்பட்டது.

Update: 2022-03-06 15:21 GMT
கொள்ளை நடந்த வீட்டில் போலீசார் விசாரணை நடத்தினர்.

புதுக்கோட்டை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவர் ஓய்வு பெற்ற அரசு துறை ஓட்டுநர்.

இவருக்கும் இவரது மனைவி மனோன்மணிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததால் சமீப காலமாக அவர் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சின்ன துரைக்கு பாரதிராஜா என்ற மகனும் வெண்ணிலா என்ற மகளும் உள்ளனர். பாரதிராஜா மருத்துவராக கனடா நாட்டில் பணியாற்றி வருகிறார்.பெரியார் நகர் வீட்டில் மனோன்மணி பாரதிராஜா மற்றும் வெண்ணிலா ஆகியோர் உள்ளனர்

இன்று காலை வெண்ணிலாவிற்கு காரைக்குடியில் திருமணம் நடந்ததால் நேற்று நள்ளிரவு 11 மணிக்கு மனோன்மணி தனது குடும்பத்தினருடன் காரைக்குடிக்கு சென்றுவிட்டு மகளின் திருமணம் முடிந்து இன்று மாலை பெரியார் நகரில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார்.

வீடு திரும்பிய  அவருக்கு வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து உடனடியாக அவர் நகர காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வீட்டில் இருந்த 75 பவுன் தங்க நகைகள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் சி.சி.டி.வி. கேமராக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த ஹார்ட் டிஸ்க்கையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர்.

இதனை தொடர்ந்து மனோன்மணி மற்றும் பாரதிராஜாவிடம் காவல்துறையினர் துருவித்துருவி விசாரணை செய்து வருகின்றனர்

திருமணத்திற்கு நகைகள் ஏன் எடுத்துச் செல்லவில்லை என்று காவல்துறை அவரிடம் விசாரணை செய்தபோது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.


இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவு செய்து வருகின்றனர். மேலும் மோப்ப நாய் தீரன் வரவழைக்கப்பட்டும் சோதனை நடத்தப்பட்டது.

மேலும் போலீசார் அவர்களது உறவினர்களிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கொள்ளையர்கள் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனரா அல்லது தெரிந்த நபர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டனரா என்று புதுக்கோட்டை நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News