மாநகராட்சி- நகராட்சி- பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தல்: முத்தரசன்

மறைமுக தேர்தல் பல்வேறு முறைகேடுகளுக்கு வழி வகுக்கும். இது கடந்த காலத்தில் கிடைத்த வரலாறு படிப்பினை ஆகும்

Update: 2021-10-14 06:41 GMT

புதுக்கோட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்

விரைவில் நடைபெறவுள்ள  மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடத்த வேண்டும் என்றார் இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் இரா. முத்தரசன்.

புதுக்கோட்டையில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று  செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:  ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. புதிதாக பொறுப்பேற்ற அரசுக்கு மக்கள் கொடுத்த பரிசு அவர்கள் அறிவித்துள்ள நலத்திட்ட உதவிக்கான பாராட்டு கூட்டணிக் கட்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறோம்.விரைவில்  நடைபெறவுள்ள  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு  மக்களோ நேரடியாக  வாக்களித்து தேர்வு செய்யும்  நடைமுறையை அரசு அறிவிக்க வேண்டும். இதற்காக தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு முன்வரவேண்டும்.

ஏனென்றால், மறைமுக தேர்தலில் பல்வேறு முறைகேடுகளுக்கு வழி வகுக்கும். இது கடந்த காலத்தில் ஏற்பட்ட வரலாறு படிப்பினை ஆகும். எனவே, நேரடி தேர்தலுக்கான அவசியத்தை உணர்ந்து தீர்மானத்தை நிறைவேற்றி, நடைமுறைப்படுத்த வேண்டும்.சட்டப் பேரவைகளில் நிறைவேற்றக்கூடிய தீர்மானங்களுக்கும் சட்ட முன்வடிவு உள்ளிட்டவைகளுக்கு மத்திய அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும்.

குறிப்பாக நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது மத்திய அரசு உடனடியாக இதனை பரிசீலனை செய்து தமிழகத்திற்கு நீட் விலக்கு அளிக்க வேண்டும்.உத்தரபிரதேசத்தில் நடந்த சம்பவத்திற்கு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் சென்று அங்கு உத்தரபிரதேசத்தில் நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும்  துணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பல்வேறு கருத்துகளைக் கூறியுள்ளனர். மக்கள் அளித்துள்ள தீர்ப்பை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தோல்வியை ஒரு பாடமாக அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். கடந்த கால அலங்கோல ஆட்சியால்தான்  அவர்களுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. விஜய் ரசிகர் மன்றத்தினர் தற்போது ஊராட்சி தேர்தலில் உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர். அது நல்ல விஷயம் தான். ஆனால், விஜய் ரசிகர் மன்றத்திற்கு கிடைத்துள்ள வெற்றியை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினிகாந்த் வருகிறேன் வருகிறேன் என்று  சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் அவர் வரவில்லை.  கமல்ஹாசன் அரசியலுக்கு வந்து பல்வேறு பாடங்களை கற்றுக் கொண்டு வருகிறார்.

மதிமுக பொதுச்செயலாளர் அரசியலுக்கு வந்து என்னுடைய வாழ்க்கையை இழந்துவிட்டேன் என்று கூறியது விரக்தியால் அல்ல. அரசியலுக்கு வந்து பல துன்பங்களை அனுபவித்தேன்,  என்னுடைய பையனும் அதேபோன்று அனுபவிக்கக் கூடாது என்றுதான் கூறினார். வாரிசு அரசியல் குறித்து வைகோ கூறிய கருத்து  தொடர்பான  கேள்விக்கு பதிலளிக்காமல் தவிர்த்துவிட்டார் இரா. முத்தரசன்.

Tags:    

Similar News