அரசின் திட்டங்களை தடுக்கும் தனிநபர்: ஆட்சியர், எஸ்பியிடம் புகார் மனு

அரசின் திட்டங்களை நிறைவேற்ற விடாமல் தனிநபர் ஒருவர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் புகார் மனு.

Update: 2021-07-26 15:00 GMT

பிசானத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தனிநபர் ஒருவர் மீது புகார் மனு கொடுத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள பிசானத்தூர் கிராமத்தில் 8 இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர் ஆனால் அதே பகுதியைச் சேர்ந்த ரஜினி என்பவர் ஊருடன் ஒற்றுமையாக இல்லாமல் தனித்து இருந்து ஊர் பொதுமக்களுக்கும் ஊர் பஞ்சாயத்து தலைவருக்கு பெரும் நெருக்கடிகளை அளித்து வருகிறார். இதனால் கிராம வளர்ச்சி மற்றும் நலனுக்காக கிராம மக்கள் ஒன்று கூடி ஒரு முடிவு எடுத்தால் அதனை செய்யவிடாமல் தடுத்து வருவதாக கூறப்படுகிறது.

அதையும் மீறி கிராம நலனுக்காக ஏதேனும் பணி செய்தால் அரசு அதிகாரிகளிடம் புகார் மனு அளித்து அதனை செய்யவிடாமல் தடுத்து வருவதாகவும், ஏதேனும் அந்தப்பகுதியில் பணி செய்ய வேண்டும் என்றால் தனக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து ரஜினி பஞ்சாயத்து தலைவரை மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. மேலும் தான் தமிழ் தேசிய கழக கட்சியில் மாவட்ட செயலாளராக உள்ளேன் என்றும் தனது மனைவி எஸ்பி அலுவலகத்தில் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார்.

என்னை ஒன்றும் செய்ய முடியாது, நான் சொல்வதை மட்டும் தான் செய்ய வேண்டும் என்று கூறி தொடர்ந்து இடையூறு செய்து வருவதாக கூறி இன்று பிசானத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ரஜினி மீது புகார் மனு கொடுத்தனர்.

பின்னர் அந்த புகாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும் என்று கூறியதையடுத்து ஒட்டு மொத்த கிராம மக்களும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று ரஜினி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர். தனிப்பட்ட நபர் மீது ஒட்டு மொத்த கிராம மக்களும் புகார் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags:    

Similar News