ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு; அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின்னர், ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-28 08:00 GMT

கோடை விடுமுறைக்கு பின், வரும் ஜூன் 1ம்  தேதி பள்ளிகள் திறப்பு (கோப்பு படம்)

தமிழகத்தில் 2022 - 23 ம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் இன்றுடன் முடிவடைகிறது. ஏற்கனவே 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று கடைசி ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறுகிறது. நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது.

இந்நிலையில் கோடை விடுமுறைக்குப் பின்னர் 2023 - 24ம் ஆண்டுக்கான வகுப்புகள் ஜூன் 1ம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 6 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதி முதல் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிகள் திறந்தவுடன் மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் 515 பள்ளிகள் விதிமுறைகளை பின்பற்றாமலேயே தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் 2024 ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் என்றும் அமைச்சர் அறிவித்தார். அடுத்த ஆண்டு மார்ச் 19ம் தேதி 11ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கும் என்றும், மார்ச் 18 ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கோடை விடுமுறை காலம் என்பது, ஓராண்டு காலம் பள்ளிக்கு சென்று படித்த மாணவ செல்வங்களுக்கு இளைப்பாறும் காலமாகும். அதற்காகவே, இந்த விடுமுறை அவர்களுக்கு தரப்படுகிறது. அவர்களை, இந்த விடுமுறை நாட்களில் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். நீர்நிலை பகுதிகளுக்கு அவர்களை செல்ல அனுமதிக்கவே கூடாது. பெரியவர்களின் துணையின்றி நீர்நிலை பகுதிகளுக்கு அவர்கள் செல்லவே கூடாது. மேலும் கோடை கால சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்புவதாக இருந்தால், அவர்களுக்கு ஆர்வம் உள்ள, பயன் தரக்கூடிய கோர்ஸ்களில் சேர்த்து விட வேண்டும். இதில், பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். ஸ்போக்கன் இங்கிலீஷ், கம்ப்யூட்டர் கோர்ஸ், நூலகம் என எங்கு என்றாலும், அதற்கான முழு விவரங்களை அறிந்துகொண்டு, அதில் அவர்கள் சேர்ந்து கற்க, தேவையான நடவடிக்கைகளை பெற்றோர்கள் எடுக்க வேண்டும். அவர்களுக்கு, இந்த கோடை விடுமுறை சிறந்த முறையில், பயனுள்ளதாக அமைய  பெற்றோர்கள் முழு முனைப்புடன் செயல்பட வேண்டும், என்றார்.

முன்னதாக  சென்னை கோட்டூர்புரத்தில் நடந்த மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில், தமிழக பள்ளிக்கலவித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்றார். 

Tags:    

Similar News