இராசிபுரத்தில் பட்டுக்கூடு விற்பனை அங்காடி: அமைச்சர் மதிவேந்தன் திறப்பு

இதுவரை சேலம், தர்மபுரி, கோவை மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகாவிற்கு பட்டுக்கூடுகளை எடுத்துச் சென்று விற்பனை செய்து வந்தனர்

Update: 2021-09-26 07:15 GMT

இராசிபுரத்தில் பட்டுக்கூடு விற்பனை அங்காடியை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்துப் பார்வையிட்டார். அருகில் கலெக்டர் ஸ்ரேயாசிங், நாமக்கல் எம்.பி. சின்ராஜ், மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் ஆகியோர்.


இராசிபுரத்தில் பட்டுக்கூடு ஏல விற்பனை அங்காடியை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் பட்டு வளர்ச்சி அலுவலகத்தில், பட்டுக்கூடு ஏல விற்பனை அங்காடி நிறப்பு விழா மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் எம்.பி சின்ராஜ், பட்டு வளர்ச்சித் துறை இயக்குநர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டுக்கூடு விற்பனை அங்காடியை திறந்துவைத்து, பட்டு வளர்ச்சித் துறை சார்பில் விவசாயிகளுக்கு 12.76 லட்சம் மதிப்பிலான பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்களை வழங்கி பேசியதாவது:

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தை தொழில் வளர்ச்சியில் முன்னோடி மாநிலமாக உருவாக்கிவருகிறார். தேர்தல் பிரசாரத்தின் போது, நாமக்கம் மாவட்ட பட்டு உற்பத்தியாளர்களின் வருமானத்தை பெருக்கும் வகையில், அரசு பட்டுக் கூடு ஏல விற்பனை அங்காடி அமைக்கப்படும் என்று வாக்குறுதியளித்தார் அதன்படி இராசிபுரத்தில் பட்டுக்கூடு ஏல விற்பனை அங்காடி திறக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 394 பட்டு விவசாயிகள், 2,439 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி சாகுபடி செய்து, பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாதம்தோறும் சராசரி யாக 50 ஆயிரம் கிலோ பட்டுக் கூடுகளை விவசாயிகள் உற்பத்தி செய்து வருகின்றனர். இதுவரை

சேலம், தர்மபுரி, கோவை மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகாவிற்கு பட்டுக்கூடுகளை எடுத்துச்சென்று விற்பனை செய்து வந்தனர். இனி அவர்கள் இராசிபுரத்திலேயே விற்பனை செய்துகொள்ளலாம். இதன்மூலம் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை சார்த்த பட்டுப்புழு விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார், ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், முன்னாள் எம்.பி சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, பட்டு வளர்ச்சித் துறை துணை இயக்குனர் சந்திரசேகரன், பிஆர்ஓ சீனிவாசன், மாவட்ட பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குநர் முத்துப்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News