பக்தர்கள் கூடுவதை தடுக்க நாமக்கல் மாவட்டத்தில் கோயில்கள் மூடல்

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கலெக்டர் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து நாமக்கல் ஸ்ரீ ஆஞ்நேயர் கோயில் உள்ளிட்ட கோயில்கள் மூடப்பட்டன

Update: 2021-08-01 08:15 GMT

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்து கலெக்டர் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து நாமக்கல் ஸ்ரீ ஆஞ்நேயர் கோயில் உள்ளிட்ட கோயில்கள் மூடப்பட்டன.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் கெரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகுளுடன் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆக.1, 2, 3 ஆகிய நாட்களில் வரும் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி கிருத்திகை போன்ற பண்டிகைகளை முன்னிட்டு, பக்தர்கள் அதிக அளவில் கூடுவதை தடுப்பதற்காக, அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை, பொங்கல் வைபவம், வழிபாடு, நேர்த்திக்கடன் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும், நீர் வீழ்ச்சிகள், ஆறுகள், குளங்கள், கால்வாய்கள் உள்ளிட்ட எந்த நீர்நிலைகளிலும் குளிப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

கோயில்களில் வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெறும். மிக முக்கிய பூஜைகள் இண்டர்நெட் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் உத்தரவைத்தொடர்ந்து நாமக்கல்லில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில், நரசிம்மர் சுவாமி கோயில், நாமகிரியம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்கள் மூடப்பட்டுள்ளன. இங்கு ஆக.1, 2, 3ஆகிய 3 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News