கொல்லிமலை வனப்பபகுதியில் பயங்கர தீ விபத்து: வாகனப் போக்குவரத்து நிறுத்தம்

கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Update: 2024-03-26 16:00 GMT

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரம், காரவள்ளி வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீ கொளுந்துவிட்டு எரிகிறது.

கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 100க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் தீயணைப்பத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு கருதி கொல்லிமலைக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே கொல்லிமலை அடிவாரமான காரவள்ளி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் அடிவாரத்தில் லேசான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவியது.

இந்நிலையில் நேற்று காலை வனப்பகுதியில் பல ஏக்கர் பரப்பில் காட்டுத்தீ கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தும் பணியில் நாமக்கல் தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே நாமக்கல் காரவள்ளியில் இருந்து கொல்லிமலைக்கும், கொல்லிமலை சோளக்காட்டில் இருந்து காரவள்ளிக்கும் இடையோன பஸ் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து பாதுகாப்பு கருதி நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் கலாநிதி கூறுகையில், கொல்லிமலை அடிவாரமான காரவள்ளியில் ஏற்பட்ட தீயை முற்றிலுமாக அணைக்கும் பணியில் 100க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் நாமக்கல் தீயணைப்புத் துறையினரும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். ஓரளவு தீ கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மூங்கில் மரங்கள் அதிகளவு இருப்பதால் தீ மேலும் பரவி வருகிறது.

சாலையில் புகை மூட்டமாக உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. முள்ளுக்குறிச்சி வழியாக வாகனப் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. அதேவேளையில் தீவிபத்து தானாக ஏற்பட்டதால் அல்லது மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்துள்ளனரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வனப்பகுதியில் தீ வைப்போர் மீது கடும் கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News