நாமக்கல்லில் மத்திய கிழங்கு ஆராய்ச்சி மையம்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

நாமக்கல்லில் மத்திய கிழங்கு ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2021-07-12 03:30 GMT

இது குறித்து, நாமக்கல் மாவட்ட காவிரி நீரேற்ற பாசனதாரர்கள் சங்கச் செயலாளர் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் மழைப் பொழிவு மிகவும் குறைவாக உள்ளது. விவசாயிகள் கிடைக்கின்ற தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, தமிழக அளவில் மரவள்ளி கிழங்கு இப்பகுதியில் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. அடிக்கடி மரவள்ளிக்கிழங்கு பயிரில் நோய் தாக்கம் ஏற்படுவதால் மகசூல் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே கேரளத்தில் அமைந்துள்ள மத்திய கிழங்கு வகைப் பயிர்களின் ஆராய்ச்சி மையத்தின் கிளையை நாமக்கல் மாவட்டத்தில் அமைக்க வேண்டும். மேலும் மரவள்ளிக் கிழங்கு செடி உயரமாக வளர்ந்த பிறகு மருந்து அடிக்க முடியாத சூழல் உள்ளது.

இதை கருத்தில் கொண்டு, சேலம் சேகோ சர்வ் மூலம் ட்ரோன்களை பயன்படுத்தி மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவுப்பூச்சி மற்றும் பல்வேறு வைரஸ் நோய்களின் தாக்குதல்களை தாங்கி வளரக்கூடிய,  புதிய வகை மரவள்ளிக் கிழங்கு ரகங்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மரவள்ளிக் கிழங்கு விவசாயத்தையும், அதைச் சார்ந்த விவசாயிகளையும் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News