மத்திய, மாநில அரசுகளின் பாராமுகத்தால் தமிழகத்தில் லாரித்தொழில் கடும் பாதிப்பு : லாரி உரிமையாளர்கள் விரக்தி

மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் லாரித்தொழில் நலிவடையும் நிலைக்குச் சென்றுள்ளது. இத்தொழிலைக் காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2021-06-14 12:30 GMT

லாரிகள் மாதிரி படம் 

மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் லாரித்தொழில் நலிவடையும் நிலைக்குச் சென்றுள்ளது. இத்தொழிலைக் காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செலாளரும், நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவருமான வாங்கிலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது முதல் இதுவரை சாலைப் போக்குவரத்து தொழில் இயற்கையின் சதி மற்றும் மத்திய மாநில அரசுகளின் பாராமுகத்தால் தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது.

மத்திய மாநில அரசுகளுக்கு நலிவடைந்த தொழில்களை காப்பாற்றும் கடமை இருந்தும், போக்குவரத்து தொழில் செய்பவர்களை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. நாடு முழுவதும் லாரி டிரைவர்களிடம் லஞ்சம் வாங்கும், ஆர்டிஓ அதிகாரிகளின் பகல் கொள்ளை அரசுக்கு நன்கு தெரிந்திருந்தும் கண்டு கொள்வதில்லை. நெடுஞ்சாலை சுங்கச் சாவடி ஒப்பந்தம் போடும் போது அமைக்கப்பட்ட, காலாவதியான சுங்கச் சாவடிகள் இதுவரை அகற்றப்படாமல் உள்ளன.

விதிமுறைகளை மீறி ஒவ்வொரு ஆண்டும் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. சிறு லாரி உரிமையாளர்களை இத்தொழிலை விட்டு வெளியேற்றுவதற்காகவே இயற்றப்பட்ட சட்டம் தான் ஆன்லைன் மூலம் லாரிகளுக்கு வழக்குப்போட்டு அபராதம் வசூலிப்பது. மேலும் வேகக்கட்டுப்பாட்டு கருவி, 3எம் ஸ்டிக்கர் என அரசு அதிகாரிகளை வாழ வைத்து லாரி உரிமையாளர்களை மத்திய, மாநில அரசுகள் நசுக்கி வருகின்றன.

மத்திய அரசின் ஸ்க்ராப்பிங் பாலிசி என்பது குறிப்பிட்ட ஆண்டுகளில் பழைய வாகனங்களை ஓட்டாமல் நிறுத்தி எடைக்குப்போட்டு விற்பனை செய்வதாகும். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் சிறிய லாரி உரிமையாளர்களை இத்தொழிலை விட்டு வெளியேற்றி, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை மேலும் வளர்ப்பதற்கு மத்திய அரசு திட்டம் தீட்டுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

லாரி உரிமையாளர்கள் அடிக்கடி கோரிக்கை மனு கொடுத்தும், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு செய்தி அனுப்பியும் இதுவரை எந்த அரசும் இத்தொழிலை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. அரசிடமிருந்து போக்குவரத்து தொழிலுக்கு எந்த சலுகைகளும் கிடைக்காத நிலையில், தென்மாநில அளவில் லாரி உரிமையாளர்கள் அனைவரும் ஒன்று கூடி நல்ல முடிவை எடுத்தால்தான் இத்தொழிலை நலிவடையாமல் காப்பாற்ற முடியும். ஏற்கனவே பல முறை லாரி உரிமையாளர்கள் ஒற்றுமையாக இருந்து பல போராட்டங்களை நடத்தி வெற்றிபெற்றுள்ளோம். எனவே லாரி உரிமையாளர் சங்கம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு அனைத்து லாரி உரிமையாளர்களும் ஓரணியாக நின்று செயல்பட்டால்தான் இத்தொழிலை அழிவில் இருந்து மீட்க முடியும்.

இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்து மிகப்பெரிய தொழிலாக உள்ள சாலைப் போக்குவரத்து தொழிலை நம்பி பல லட்சம் லாரி உரிமையாளர்களும் தொழிலாளர்களும் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை கேட்டறிந்து உடனடியாக நிறைவேற்றவேண்டும். மேலும், புதிய டீசல், பெட்ரோல், வாகனங்கள் மீதான வரியைக் குறைக்க வேண்டும். கடந்த 15 மாதங்களாக நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

லாரி, பஸ், கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் ஓடவில்லை. இதனால் பெட்ரோல், டீசல் விற்பனை 50 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளது. இந்த நிலையில் எண்ணெய் கம்பெனிகள் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. ஒவ்வொரு நாளும் டீசல் விலையை உயர்த்தினால், அதற்கேற்ப லாரி வாடகையை எப்படி உயர்த்த முடியும். குறிப்பிட்ட இடைவெளியில், குறிப்பட்ட அளவு விலை உயர்த்தினால் அதற்கு ஈடாக வாடகையை உயர்த்த முடியும். அத்தியாவசியப் பொருட்களான பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை ஆயில் கம்பெனிகளிடம் இருந்து பறித்துவிட்டு, அதை மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும்.

அதன் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். பெரும்பாலான லாரி உரிமையாளர்கள் பேங்குகள் மற்றும் பைனான்ஸ் நிறுவனங்களின் கடன் பெற்றுத்தான் வாகனங்களை வாங்கி உள்ளனர். அந்த லாரிகளுக்கு மாதந்தோறும் கடனுக்கான இஎம்ஐ தவணைத்தொகை செலுத்த வேண்டும். கொரோனா ஊரடங்கால், லாரிகள் ஓடாததால் அந்த கடன் தவணையை செலுத்த முடியவில்லை. கடந்த ஆண்டு இதுபோன்ற கடன்களுக்கு அபராத வட்டி இல்லாமல் 6 மாதத்திற்கு கடனை நீட்டிப்பு செய்து கொடுத்தனர்.

இந்த ஊரடங்கின்போது பல முறை கோரிக்கை விடுத்தும் மத்திய ரிசர்வ் வங்கி நிதி நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு கடன் தவணையை இதுவரை நீட்டிப்பு செய்யவில்லை, உடனடியாக இதைச்செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் லாரிகளுக்கு, வழக்குப்பதிவு செய்யும்போது, ஒரு வாகனம் அதிகப்படியான உயரம், அகலம், நீளம் இருப்பதாக கூறி ரூ.20,000/- அபராதம் விதிக்கப்படுகிறது. இதை உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News