உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க அரசுக்கு கோரிக்கை

உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் நாமக்கல் மாணவர், தங்களை மீட்கும்படி ஆடியோ வெளியிட்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-02-26 03:30 GMT

மாணவர் சரவணன்.

உக்ரைன் நாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் படிப்பதற்காகவும், வேலைக்காகவும் சென்றுள்ளதாக தெரிகிறது. தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியுள்ளதால், அங்குள்ள பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் சேகர், இவரது மகன் சரவணன் (23). இவர் உக்ரைன் தலைநகரான கீவ்வில் இருந்து 480 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டணிப்ரோபெட்ரோவ்ஸ்க் மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் இறுதி ஆண்டு படித்து வருகிறார். போர் துவங்கியதும் சரவணன் இந்தியா வர முயன்றார். விமானங்கள் நிறுத்தப்பட்டதால் அவரால் வர முடியவில்லை. இந்நிலையில் அவர் அங்கு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தந்தை சேகர் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், எம்.பி சின்ராஜ் ஆகியோரை சந்தித்து மனு அளித்துள்ளார்.

இந்நிலையில் உக்ரைனில் சிக்கித்தவிக்கும், சரவணன், அங்கிருந்து ஆடியோ வெளியிட்டு, தன்னையும், சகமாணவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த ஆடியோ வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியுள்ளதாவது:

உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்துள்ளது, அதிகாலையில் குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டவாறு உள்ளன. அதிகாலை 4.30 மணிக்கு நாங்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் சக்திவாய்ந்த குண்டு வீசப்பட்டது. அதனை நாங்கள் பார்த்தோம். இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது எங்கள் பகுதியில் இருந்து பலரும் வெளியேற முயற்சிக்கின்றனர். வாகன நெரிசலால் வெளியில் செல்லமுடியவில்லை. எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உணவு, தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், உணவின் விலையும் அதிகரித்துள்ளது. விமானங்கள் இல்லாததால் என்ன செய்வதென்றே தெரியாமல் நாங்கள் உள்ளோம். இண்டர்நெட் தொடர்பும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம் இயந்திரங்கள் செயல்படவில்லை. செலவுக்கு பணம் எடுக்க இயலவில்லை. எங்கள் பகுதியில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் சிக்கி தவித்து வருகிறோம். எனவே மத்திய, மாநில அரசுகள் எங்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் உருக்கமாக கூறியுள்ளார்.

Tags:    

Similar News