நாமக்கல்: கறிக்கோழி வளர்ப்பு கூலிஉயர்வு கோரி ஏப்.29 முதல் வேலைநிறுத்தம்

கறிக்கோழி வளர்ப்புக் கூலியை உயர்த்தி வழங்கக்கோரி ஏப். 29ம் தேதி முதல், வேலைநிறுத்தம் செய்வதாக, கறிக்கோழி வளர்ப்போர் அறிவித்துள்ளனர்.

Update: 2022-04-26 02:30 GMT

கறிக்கோழி வளர்ப்புக்கான கூலியை உயர்த்தி வழங்கக்கோரி, மனு கொடுப்பதற்காக, பண்ணையாளர்கள் சங்கத்தினர் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட கறிக்கோழி வளர்ப்போர், விவசாயிகள் நலச்சங்கத்தினர் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 400 பண்ணையாளர்கள் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறோம். பிராய்லர் கோழி உற்பத்தி நிறுவனங்களிடம் கோழிக்குஞ்சுகளைப் பெற்று, வளர்த்து அவர்களுக்கு கொடுத்து வருகிறோம். இதற்காக பிராய்லர் கோழி நிறுவனங்கள் ஒரு கிலோவுக்கு ரூ.6.50 கூலியாக வழங்குகின்றனர்.

தற்போது விலைவாசி உயர்வால் இடுபொருட்களான கடலை புண்ணாக்கு, தேங்காய் புண்ணாக்கு, பாசி பருப்பு மற்றும் தேங்காய் நார், கரிமூட்டை, மின்சார கட்டணம், பண்ணை பராமரிப்பு உள்ளிட்டவை விலை உயர்ந்து விட்டன. எனவே கறிக்கோழி வளர்ப்புக்கான கூலியை எப்.சி.ஆர்.2.00 ரக கோழிகளுக்கு ரூ.12-ம், எப்.சி.ஆர்.1.60 ரக கோழிகளுக்கு ரூ.20 ஆகவும் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுமத்திடம் (பிசிசி) கோரிக்கை விடுத்தோம். அவர்கள் சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடம் நீங்களேபேசிக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர். எனவே தனியார் கறிக்கோழி நிறுவனங்களின் முறையற்ற செயல்பாடுகளை கண்டித்து வருகிற 29-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். 29ம் தேதி முதல் பண்ணைகளில் புதிய கறிக் கோழிகுஞ்சுகளை விடுவது இல்லை என முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News