நாமக்கல்லில் செப். 19 முதல் 3 நாட்கள் ஆதிவாசிகள் அமைப்பின் அகில இந்திய மாநாடு

நாமக்கல்லில் வருகிற செப். 19, 20, 21 ஆகிய 3 நாட்கள், அகில இந்திய அளவிலான ஆதிவாசிகள் உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது.

Update: 2023-07-30 05:00 GMT

நாமக்கல்லில் ஆதிவாசிகள் உரிமைகளுக்கான தேசிய அமைப்பின், மாநாட்டுக்கான வரவேற்புக்குழு அலுவலகத்தை, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின், நாமக்கல் மாவட்ட குழு சார்பில், ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் 4-வது அகில இந்திய மாநாடு வரும் செப்டம்பர் 19, 20, 21 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் நாமக்கல்லில் நடைபெற உள்ளது. இதற்கான வரவேற்புக் குழு அமைப்பு கூட்டம், நாமக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் மத்திய குழு உறுப்பினர் ரங்கசாமி தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பு குழு செயலாளர் வேலுசாமி வரவேற்றார்.

மாநாட்டு வரவேற்பு குழுவின் குழு தலைவராக, அரூர் முன்னாள் எம்எல்ஏவும், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவருமான டெல்லி பாபு, செயலாளராக தமிழ்நாடு விவசாய சங்கத்தின் நாமக்கல் மாவட்ட குழு செயலாளர் பெருமாள், பொருளாளராக இந்திய மாணவர் சங்க முன்னாள் மாநில தலைவர் கண்ணன், மற்றும் விவசாய சங்க முன்னாள் மத்திய குழு உறுப்பினர் ரங்கசாமி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கருப்பண் ஆகியோர் புரவலர்களாக தேர்வு செய்யப்பட்டனர். 40 துணை தலைவர்கள் ,40 துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட 151 பேர் கொண்ட மாநாட்டு வரவேற்பு கமிட்டி அமைக்கப்பட்டது.

கூட்ட முடிவில், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வரும் செப்டம்பர் மாதம் 19 ,20 ,21 ஆகிய 3 நாட்கள், ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் 4-வது அகில இந்திய மாநாடு நாமக்கலில் நடைபெற உள்ளது. அதில் இந்தியா முழுவதிலும் இருந்து 18-மாநிலங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் வந்து கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த மாநாட்டில் அகில இந்திய அளவில் உள்ள தலைவர்களும், குறிப்பாக கேரளா மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு பேச உள்ளனர். குறிப்பாக தற்போது பாஜக மலைவாழ் மக்களுக்கும் , விவசாயிகளுக்கும் எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், மலைவாழ் இன மக்களுக்கான ஜாதி சான்றிதழ் வழங்குவதில் ஏற்படுத்தி வரும் குளறுபடிகளை தடுக்கும் நோக்கத்திலும், அகில இந்திய அளவில், மலைவாழ் மக்களுக்கு எதிராக இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், பல்வேறு தீர்மானங்களை இந்த மாநாட்டில் நிறைவேற்ற இருப்பதாகவும் தெரிவித்தார். முன்னதாக மாநாட்டு பணிகளை கவனிப்பதற்காக வரவேற்புக் குழு அலுவலகத்தை சண்முகம் திறந்து வைத்தார் .

Tags:    

Similar News