எய்ட்ஸ் உள்ளதாக தவறாகக்கூறிய தனியார் மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் அபராதம்

எய்ட்ஸ் உள்ளதாக தவறாகக்கூறிய தனியார் மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-08-01 06:45 GMT

பைல் படம்

நோயாளி ஒருவருக்கு, எய்ட்ஸ் உள்ளதாக தவறாக தெரிவித்த தனியார் கண் ஆஸ்பத்திரி உள்ளிட்ட, 14 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 15 லட்சம் இழப்பீடு வழங்க நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் இன்று ஒரே நாளில் 14 வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டன.

கோவை பீளமேட்டை சேர்ந்தவர், கிருஷ்ணசாமி (71). அவர் கடந்த 2017 டிசம்பர் மாதத்தில் கோவையில் உள்ள தனியார் கண் ஆஸ்பத்திரிக்கு, கண் பரிசோதனைக்காக சென்றுள்ளார். அந்த மருத்துவமனையில் கண்களை பரிசோதித்த டாக்டர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறி, அதற்கு முன்பாக ரத்தம் மற்றும் சிறுநீர் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்யுமாறு தெரிவித்துள்ளார்.

பரிசோதனைகளின் முடிவில் அவருக்கு எய்ட்ஸ் நோய் உள்ளதாக மருத்துவமனையினர் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணசாமி கோவை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியிலும், மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியிலும் ரத்தம் பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு எய்ட்ஸ் நோய் இல்லை என்று மருத்துவ அறிக்கையை வழங்கி உள்ளார்கள்.

இதனால் பாதிப்புக்கு உள்ளான கிருஷ்ணசாமி கடந்த 2018 ஆம் ஆண்டில் கோவை நுகர்வோர் கோர்ட்டில் தனியார் கண் ஆஸ்பத்திரி மீது வழக்கு தொடர்ந்தார், அந்த வழக்கு, விரைவான விசாரணைக்கு, கடந்த 2022 ஜூலை மாதம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. விசாரணை முடிவில் நீதிபதி டாக்டர் ராமரஜ் தீர்ப்பு வழங்கினார். அதில், தனியார் கண் மருத்துவமனை கவனக்குறைவுடன் செயல்பட்டு அலட்சியமான சேவை புரிந்துள்ளதால், வழக்கு தாக்கல் செய்தவருக்கு இழப்பீடாக ரூ. 5 லட்சத்தை 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

கிரெடிட் கார்டு மோசடி:

கோவை கோபாலபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (34), இவர் எச்டிஎப்சி வங்கியில் கிரெடிட் கார்ட் பெற்றுள்ளார். 2017 பிப்ரவரி இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்ளுமாறு வங்கியில் இருந்து தெரிவித்துள்ளனர். ஆனால், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.

இருப்பினும் இன்சூரன்ஸ் பாலிசிக்கு என கிரெடிட் கார்டு மூலம் ரூபாய் 30 ஆயிரத்தை வங்கி எடுத்துக் கொண்டது. இது குறித்து வங்கியில் புகார் அளித்தும் வங்கி பணத்தை திருப்பித் தரவில்லை. பணத்தை திருப்பி தராததால் வங்கி மீது கடந்த 2018 ஆம் ஆண்டு தாக்கல் செய்த வழக்கில், தீர்ப்பளித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி டாக்டர் ராமராஜ், வங்கியின் செயல் நேர்மையற்ற வர்த்தக நடைமுறை எனக் கூறி ராஜேந்திரனுக்கு வங்கி பிடித்தம் செய்த ரூ 30,000/- அதற்கு வட்டி மற்றும் இழப்பீடு உட்பட ரூ 50,000 சேர்த்து 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல், தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவன சேவை குறைபாடு, தனியார் பஸ் பயண சீட்டில் முறைகேடு செய்த பஸ் கம்பெனி, இழப்பீட்டு தொகையை வழங்காத இன்சூரன்ஸ் கம்பெனி போன்ற மொத்தம் 14 வழக்குகளில், இன்று ஒரே நாளில் நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில், பாதிக்கப்பட்டவர்களுக்கு, மொத்தம் 5 நிறுவனங்கள் ரூ. 15 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

Tags:    

Similar News