தொற்று இல்லாத மாவட்டமாக நாமக்கல்லை மாற்ற நடவடிக்கை: கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்

நாமக்கல்லை, கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, புதிய கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-17 07:33 GMT

நாமக்கல் புதிய கலெக்டர் ஸ்ரேயாசிங்

நாமக்கல் கலெக்டராக பணி புரிந்து வந்த மெகராஜ், தமிழ்நாடு நகராட்சிகள் நிர்வாக அலுவலக இணைச்செயலாளராக மாறுதல் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஸ்ரேயா சிங் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு, இன்று காலை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரேயாசிங் பி.டெக் (இசிஇ) பட்டம் பெற்று, 2009 முதல் 2010 வரை இன்போசிஸ் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றினார். பணியில் இருந்து கொண்டே யுபிஎஸ்சி தேர்வு எழுதி, 2012ம் ஆண்டு தேர்ச்சி பெற்று ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார்.

எனினும், ஐஏஎஸ் தேர்ச்சியே இவரது நோக்கமாக இருந்ததால், மீண்டும் அடுத்த ஆண்டு, யுபிஎஸ்சி தேர்வு எழுதி 2013ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றார். முதலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பயிற்சி கலெக்டராக பணியில் சேர்ந்தார். பின்னர் அதே மாவட்டம் பத்மநாபபுரத்தில் சப்-கலெக்டராக பணியாற்றினார். தொடர்ந்து சென்னையில், தமிழக அரசின் உள்துறையில் துணை செயலாளராக பணியாற்றினார். பின்னர் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒழுங்குமுறை ஆணையராக பணிபுரிந்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கூடுதல் கலெக்டராக பணியாற்றி, கலெக்டராக பதவி உயர்வு பெற்று முதன்முறையாக நாமக்கல் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்பு மதுமதி, ஆசியா மரியம் ஆகிய 2 பெண்கள், நாமக்கல் மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்துள்ளனர். இவர் மாவட்டத்தின் 3வது பெண் கலெக்டர் ஆவார்.

புதிய கலெக்டராக பொறுப்பேற்ற ஸ்ரேயா சிங்க செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் நாமக்கல் மாவட்டமும் ஒன்றாக உள்ளது. அதனால் மற்ற மாவட்டங்களை விட குறைவாக தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இன்னும் ஓரிரு வாரங்களில், நாமக்கல்லை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாகவும், கொரோவினால் இறப்பு இல்லாத மாவட்டமாக மாற்றவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News