நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆக்ஸிஜன் இருப்பு : அமைச்சர் ஆய்வு

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் சிலிண்டரில் ஆக்சிஜன் இருப்பு குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-05-29 11:00 GMT

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சிலிண்டரை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட கலெக்டர் மெகராஜ் மெகராஜ், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் சிலிண்டரில் ஆக்சிஜன் இருப்பு குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழகத்தில்  கொரோனா தொற்று பரவலை தடுக்க தளர்வுகள் அற்ற லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய தொகுப்பிலிருந்து அதிக அளவு ஆக்ஸிஜன் பெற நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதனால் ஆஸ்பத்திரிகளில் தேவைப்படும் ஆக்ஸிஜன் அளவு கணக்கிடப்பட்டதுடன் தேவையான ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் தேவைக்காக 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் சிலிண்டர் அமைக்கப்பட்டு அதிலிருந்து குழாய்கள் மூலம் ஆஸ்பத்திரியில் உள்ள பல்வேறு வார்டுகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த கொள்கலனில் வாரம் ஒரு முறை திரவ ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டு நிரப்பப்பட்ட நிலையில், தற்போது தேவை அதிகரிப்பால் 2 நாட்களுக்கு ஒரு முறை திரவ ஆக்ஸிஜன் நிரப்பப்பட்டு வருகிறது.

மேலும் ஆக்ஸிஜன் அளவை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு தினந்தோறும் மூன்று முறை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆக்சிஜன் சிலிண்டரை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தின் நேரில் பார்வையிட்டு ஆக்ஸிஜன் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.

நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 350 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நோயாளிகளுக்கு உடனுக்குடன் படுக்கை வசதி வழங்குவதற்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து கண்காணிப்பு தேவைப்படுபவர்களுக்காக நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் 90 படுக்கைகள் வசதியுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அரசு மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து அமைச்சர் மதிவேந்தன் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மெகராஜ், எம்எல்ஏ ராமலிங்கம், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அரூள்மொழி, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் சித்ரா, காசநோய் பிரிவு துணை இயக்குநர் கணபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News