நாமக்கல்: மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 லட்சம் நலத்திட்ட உதவிவழங்கல்

நாமக்கல்லில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும்முகாமில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

Update: 2022-07-14 01:30 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாமில், நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரயோசிங் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான உதவி உபகரணங்கள், மூன்று சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனம், தையல் மெசின், காதொலி கருவி உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 114 கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். அவற்றை சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது முன்னுரிமை அடிப்படையில், நடவடிக்கை எடுத்து 10 நாட்களுக்குள் தீர்வு காண கலெக்டர் உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான பேட்டரி பொருத்தப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலிகள், 27 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.3,000 மதிப்பிலான காதொலி கருவிகள், ஒருவருக்கு ரூ.8,000 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலி, 3 பேருக்கு தலா ரூ.4,000 மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் மெசின்கள், ஒருவருக்கு ரூ.1,000 மதிப்பிலான பிரெய்லி கடிகாரம் மற்றும் ரூ.3,500 மதிப்பிலான அதிரும் மடக்கு கோல் என மொத்தம் 34 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமுருகதட்சிணாமூர்த்தி, சமூக பாதுகாப்புத்திட்ட சப் கலெக்டர் தேவிகாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News