வரும் 21, 22 தேதிகளில் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கவிதை, பேச்சுப் போட்டி
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பள்ளி, மாணவர்களுக்கு வரும் 21ம் தேதியும், கல்லூரி மாணவர்களுக்கு வரும் 22ம் தேதியும் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.;
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பள்ளி, மாணவர்களுக்கு வரும் 21ம் தேதியும், கல்லூரி மாணவர்களுக்கு வரும் 22ம் தேதியும் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆண்டு தோறும் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2024-25ம் ஆண்டுக்கு, மாவட்ட அளவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வரும் 21ம் தேதி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கல்லூரி மாணவ, மாணவியருக்கு வரும் 22ம் தேதி, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியிலும், கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடக்கிறது.
போட்டிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர், கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். போட்டிக்கான தலைப்புகள் போட்டி நடக்கும் நாள் அன்று, போட்டி துவங்குவதற்கு முன் அறிவிக்கப்படும். போட்டியில் வெற்றி பெறும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே, மாவட்ட அளவில் முறையே ரூ. 10,000, 7,000, 5,000 வீதரம் பரிசுகள் வழங்கப்படும். மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் மாணவர்கள், மாநிலப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு, நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை, 04286- 292164 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.