நாமக்கல்லில் குடியிருப்புகளை விட உயரமான சாலை: தலைமைச் செயலாளர் உத்தரவால் உடைப்பு

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் குடியிருப்புகளை விட உயரம் அதிகமாக போடப்பட்டு ரோடு, தலைமைச் செயலாளர் உத்தரவின்பேரில் உடைக்கப்பட்டது.

Update: 2022-01-17 07:00 GMT

நாமக்கல் நகராட்சி, கொங்க நகர் பகுதியில் உயரமாக போடப்பட்ட ரோடு, தலைமைச் செயலாளர் உத்தரவால், பொக்லைன் இயந்திரம் மூலம் உடைக்கப்பட்டது.

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், பழுதான சாலைகளை சீரமைத்து புதிய சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மோகனூர் சாலையில் இருந்து கொங்கு நகருக்கு செல்லும் ரோடு, கடந்த ஆட்சிக் காலத்தில் டெண்டர் விடப்பட்டு நிலுவையில் இருந்து வந்தது.

இந்த பணி 192 மீட்டர் தூரத்துக்கு சுமார் ரூ.26 லட்சம் மதிப்பில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முடிக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த பழைய ரோட்டை தோண்டி அகற்றாமல், அதன்மீது புதிய ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ரோட்டின் உயரம் அரை அடிக்கு மேல் உயர்ந்து விட்டது.

அந்த தெருவில் உள்ள வீடுகளின் தரை மட்டத்திற்கு மேல், சாலையின் உயரம் அதிகமானதால், வீடுகளின் காம்பவுண்டு சுவரில் இருந்த கேட்டுகளை திறந்து வெளியே வர முடியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் தரப்பில் தமிழக அரசு தலைமை செயலாளர் இறையன்புவுக்கு  கோரிக்கை மனு அனுப்பி வைத்தனர்.

ஏற்கனவே தமிழக முதல்வர் இது குறித்து அறிவிப்பு செய்துள்ளதால், உடனடியாக அந்த சாலையை சீரமைத்துக்கொடுக்க, தலைமைச் செயலாளர் இறையன்பு, நாமக்கல் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் புதிதாக போடப்பட்ட தார் சாலை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. அதன் உயரத்தை குறைத்து சாலையின் அடிப்பகுதியை பறித்து பின்னர் சீரானா முறையில் புதிய தார் சாலை அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News