நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையை நிர்ணயம் செய்ய நெஸ்பாக் அமைப்பு துவக்கம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையை நிர்ணயம் செய்ய நெஸ்பாக் அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-23 10:30 GMT

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு மூலம் முட்டை கொள்முதல் விலை நிர்ணயம் செய்து அறிவிக்கப்படுகிறது. ஆனால் பல இடங்களில் முட்டை வியாபாரிகள் அறிவிக்கப்பட்ட விலையில் இருந்து விலையைக் குறைத்து,  முட்டையைக் கொள்முதல் செய்கின்றனர். இதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் என்இசிசி மண்டல அலுவலகத்தில், அனைத்து கோழிப்பண்ணையாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் முட்டை வியாபாரிகள் அடங்கிய சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், என்இசிசி, நாமக்கல் முட்டை வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம், தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனம், நாமக்கல் மண்டல முட்டை உற்பத்தியாளர்கள் சொசைட்டி, நாமக்கல் முட்டை வியாபாரிகள் சங்கம், நாமக்கல் முட்டை உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் என்இசிசி 7 வட்டாரக் குழு, மத்திய செயற் குழு உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் மண்டல என்இசிசி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில், நாமக்கல் முட்டை விற்பனை விலை நிர்ணய ஆலோசனைக்குழு (நெஸ்பாக்) என்ற பெயரில் புதிய அமைப்பு துவக்கப்பட்டது. இதன் கூட்டத்தில், இனி வரும் காலங்களில் இந்த நெஸ்பாக் அமைப்பு மட்டுமே முட்டைக்கான மைனஸ் விலையை அறிவிக்கும் என முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி இன்றைய விலையில் இருந்து முட்டைக்கு 30 பைசா மைனஸ் செய்து விற்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இனி ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு என்இசிசி முட்டை விலை அறிவிக்கும்போது, முட்டைக்கான மைனஸ் விலையை 6.45 மணிக்கு நெஸ்பாக் அறிவிக்கும் என முடிவு செய்யப்பட்டது. எனவே பண்ணையாளர்கள் அனைவரும் நெஸ்பாக் அறிவிக்கும் மைனஸ் விலையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதிகமான மைனஸ் விலைக்கு வியாபாரிகள் கேட்டால் அருகில் உள்ள என்இசிசி மற்றும் பண்ணையாளர்கள் சங்க அலுவலகத்தை அனுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News