பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்க நாமக்கல் விசைத்தறியாளர்கள் கோரிக்கை

பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்க நாமக்கல் மாவட்ட விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-05-23 09:31 GMT
நாமக்கல் மாவட்ட விசைத்தறியாளர்கள் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.

நூல் விலையை கட்டுப்படுத்த, மத்திய அரசு பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வெண்ணந்தூர் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இது குறித்து, நாமக்கல் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-

நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விசைத்தறி நெசவு முக்கிய தொழிலாளக உள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இத்தொழிலுக்கு தேவையான பருத்தி நூல் வரலாறு காணாத அளவில் விலை உயர்ந்துள்ளது. 50 கிலோ எடை கொண்ட 40ம் நம்பர் நூல், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.9 ஆயிரமாக இருந்தது. தற்போது இதன் விலை ரூ.18 ஆயிரமாக உயர்ந்துள்ளது. நூல் விலை உயர்வால், விசைத்தறி துணி உற்பத்தியில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு, தொழிலை நடத்த முடியாமல், அதன் உரிமையாளர்களும், தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே நூல் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பருத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு, மத்திய அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Tags:    

Similar News