திருட்டுப்போன லாரி உரிமையாளருக்கு ரூ. 16 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு

திருட்டுப்போன லாரி உரிமையாளருக்கு ரூ. 16 லட்சம் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-05-10 07:00 GMT

நுகர்வோர்  நீதிமன்றம் (கோப்பு படம்)

நாமக்கல் :

திருட்டுப்போன லாரியின் உரிமையாளருக்கு ரூ. 16 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு சொந்தமான இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு நாமக்கல் நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் கடந்த மாதத்தில் விசாரணை முடிவடைந்த 7 வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

நாமக்கல், சேலம் ரோட்டில் பி. சி. எஸ். டிரான்ஸ்போர்ட் என்ற போக்குவரத்து நிறுவனத்தை நடத்தி வருபவர் சந்திரசேகரன் (55). இவருக்கு சொந்தமான லாரியை கடந்த 2019ம் ஆண்டு அதன் டிரைவர் ஓட்டிச் சென்று, சங்ககிரி அருகே நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றார். பின்னர்  திரும்பி வந்து பார்த்தபோது லாரியை காணவில்லை.

இது குறித்து சங்ககிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மேலும், லாரிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருந்த, சேலத்தில் உள்ள நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனிக்கு சந்திரசேகரன் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் லாரியை கண்டுபிடிக்க இயலவில்லை என்று கோர்ட்டில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தனர்.

இதையொட்டி இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பாலிசிபடி, காணாமல் போன லாரிக்கான இன்சூரன்ஸ் தொகை ரூபாய் ரூ. 15 லட்சத்தை தருமாறு சந்திரசேகரன் கேட்டு வந்துள்ளார். ஆனால் 19 மாதங்கள் கழித்து கடந்த 2021 ஜனவரி மாதத்தில் லாரி டிரைவரின் நம்பிக்கை துரோகத்தால் லாரி காணாமல் போனதாகவும், அதனால் இழப்பீட்டுத் தொகை வழங்க முடியாது என்று இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் லாரி உரிமையாளர் சந்திரசேகர், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டில் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், இன்று மாவட்ட நுகர்வோர் கோர்ட் உறுப்பினர் ரத்தினசாமி முன்னிலையில் நீதிபதி டாக்டர் ராமராஜ் தீர்ப்பு வழங்கினார். அதில், எதிர் பாராத விதமாக தமது லாரி விபத்துக்கு உள்ளாகும் போதும், திருடு போகும் போதும் இழப்பை தவிர்ப்பதற்காக லாரியின் உரிமையாளர் அரசுக்கு சொந்தமான இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஒரு ஆண்டுக்கு, ரூ 49,532 பிரிமியம் செலுத்தி இன்சூரன்ஸ்  செய்துள்ளார். லாரி காணாமல் போன பின்னர் அதன் உரிமையாளர் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு போதுமான ஆவணங்களை சமர்ப்பித்து. பாலிசிபடி இன்சூரன்ஸ் தொகையை கேட்ட போதும் 19 மாதங்கள் கால தாமதம் செய்து அவரது கோரிக்கையை நிராகரித்தது இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடாகும்.

தமது தரப்பு பதிலை தாக்கல் செய்ய கோர்ட் வாய்ப்பு அளித்தும் இன்சூரன்ஸ் நிறுவனம் வழக்கு நடத்த முன் வரவில்லை. இதனால் லாரி உரிமையாளருக்கு பாலிசி படி முழு இன்சூரன்ஸ் தொகை ரூபாய் 15 லட்சத்தை லாரி காணாமல் போன 2019 ஜூன் மாதம் முதல் வட்டியுடன் சேர்த்து 4 வார காலத்திற்குள் வழங்க வேண்டும். இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டால் லாரி உரிமையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூபாய் ஒரு லட்சம் வழங்க வேண்டும் என்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மற்றொரு வழக்கில் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வங்கிக்கு உத்தரவு:

நாமக்கல் மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் வசித்து வருபவர் செங்கோட்டையன் (63). இவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, குருக்கபுரம் கிளையில் கடந்த கடந்த 2016 ஜூலை மாதத்தில் ரூபாய் 5 ஆயிரத்தை பிக்சட் டெபாசிட் செய்துள்ளார். இதே கிளையில் அவர் வெவ்வேறு நாட்களில் 17 ஃபிக்ஸட் டெபாசிட் செய்துள்ளார். இவற்றிற்கு கொடுத்த விண்ணப்பங்களில் டெபாசிட் முதிர்ச்சி அடையும்போது தொடர்ந்து மீண்டும் புதுப்பித்துக் கொள்ளுமாறு வங்கிக்கு தெரிவித்துள்ளார். வங்கி அவ்வாறு செய்யாததை அறிந்து செங்கோட்டையன் வங்கி மேலாளரிடம் கேட்ட போது இணையதளத்தில் புதுப்பிக்கப்படாமல் விட்டு விட்டது என்றும் மீண்டும் புதிதாக டெபாசிட் செய்து விடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு இடைவெளி விட்டு டெபாசிட் செய்தால் வட்டி இழப்பு ஏற்படும் எனக் கூறி அதற்கு வாடிக்கையாளர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் வங்கியின் வாடிக்கையாளர் தமக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி கடந்த 2022 ஜூன் மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர் ராமராஜ் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில். வங்கியின் வாடிக்கையாளர் எழுத்துப்பூர்வமாக வேண்டுகோள் எதுவும் வழங்காத நிலையில், டெபாசிட் தொகைகள் முதிர்ச்சி அடையும் போது, தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளும் வசதியை ரத்து செய்தது சேவை குறைபாடாகும், வங்கியின் சேவை குறைபாட்டால் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு வங்கி ரூ 50 ஆயிரத்தை இழப்பீடாக அவருக்கு 4 வார காலத்துக்குள் வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News