நாமக்கல் நகராட்சியில் 3 பள்ளிகளில் காலை உணவுத்திட்டம்: கலெக்டர் ஆய்வு

நாமக்கல் நகராட்சியில் 3 பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்திற்கான பணிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார்.

Update: 2022-08-25 09:45 GMT

நாமக்கல் நகராட்சி பகுதி பள்ளிகளில் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட இருப்பதை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் ஆய்வு செய்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். முதல் கட்டமாக, மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகள், மலைப் பகுதிகள் எனத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடங்கப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக நாமக்கல் நகராட்சி, திருச்செங்கோடு நகராட்சி மற்றும் மலைப்பகுதியான கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்க முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாமக்கல் நகராட்சியில் இத்திட்டத்தின் கீழ், நாமக்கல் முதலைப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள மைய சமையற் கூடத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக உணவு வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ள நாமக்கல் மஜித் தெரு நகராட்சி உருது தொடக்கப்பள்ளி, கோட்டை நகராட்சி தொடக்கப்பள்ளி, பதிநகர் நகராட்சி தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு, கலெக்டர் நேரில் சென்று பள்ளி தலைமையாசிரியர்களுடன் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அறிவுரைகள் வழங்கினார். ஆய்வுகளின்போது நகராட்சி கமிஷனர் சுதா, நகராட்சி பொறியாளர் சுகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News