நாமக்கல் அருகே சாலை விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு முதல்வர் ஆறுதல்

நாமக்கல் அருகே சாலை விபத்தில் காயமடைந்து, இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் நலம்பெற்ற சிறுவனிடம் முதல்வர் ஸ்டாலின் செல்போன் மூலம் உரையாடி ஆறுதல் கூறினார்.

Update: 2022-01-22 10:15 GMT

நாமக்கல் அருகே சாலை விபத்தில் காயமடைந்து, இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் நலம்பெற்ற சிறுவனிடம் முதலமைச்சர் ஸ்டாலின் செல்போனில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார்.

நாமக்கல் அருகே வசந்தபுரம், குப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, இவரது மகன் வர்ஷாந்த் (13). இவர் போகிப்பண்டிகையன்று, நாமக்கல் பகுதியில் பூக்களை விற்பனை செய்து விட்டு, இரவு நேரத்தில், வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு டீ வீலர் மோதியதால் ஏற்பட்டவிபத்தில், சிறுவன் வர்ஷாந்த் பலத்த காயமடைந்தார்.

அங்கிருந்தோர் அவரை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்தனர். டாக்டர்கள் பரிசோதனையில், அவரது வலது முன் மூளையிலும், காதிலும் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. சாலை விபத்தில் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு தமிழக அரசின் இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் அச்சிறுவனுக்கு உடனடியாக ஆபரேசன் மேற்கொள்ளப்பட்டது. இதனால் அச்சிறுவன் மூளைச்சாவு அடையாமல் மீட்கப்பட்டார்.

இந்தத் தகவலை அறிந்து சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆகியோர் வர்ஷாந்த்தின் வீட்டுக்கு நேரில் சென்று சிறுவனைச் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் மருத்துவச் செலவுக்கான நிதியுதவியையும் வழங்கினார்கள்.

அப்போது, முதல்வர் ஸ்டாலினை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், சிறுவன் விபத்தில் சிக்கிய தகவலையும், அவர் இன்னுயிர் காப்போம் திட்டத்தன் மூலம் சிகிச்சை பெற்று உடல் நலம் தேறிய தகவலையும் தெரிவித்தார். இதனையடுத்து சிறுவன் வர்ஷாந்திடம் முதல்வர் செல்போன் வழியாக ஆறுதல் தெரிவித்தார். அப்போது தலையில் வலி ஏதேனும் உள்ளதா, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை கேட்டறிந்தார்.

மேலும் உதவிகள் தேவைப்பட்டால் ராஜேஷ்குமார் எம்.பியை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அதன்பின் சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார். முதல்வரின் கனிவான பேச்சைக் கேட்டு அங்கிருந்தோர் நெகிழ்ச்சி அடைந்தனர். 

Tags:    

Similar News