பழங்களை ரசாயன முறையில் பழுக்க வைத்தால் கிரிமினல் நடவடிக்கை: உணவு பாதுகாப்புத்துறை

பழங்களை ரசாயன முறையில் பழுக்க வைத்தால், பழக்கடை உரிமையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எச்சரித்துள்ளார்.

Update: 2023-04-30 04:00 GMT

நாமக்கல் பகுதியில் உள்ள பழக்கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.

பழங்களை ரசாயன முறையில் பழுக்க வைத்தால், பழக்கடை உரிமையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எச்சரித்துள்ளார்.

நாமக்கல் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவுறுத்தலின்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் நாமக்கல் மாவட்டம் முழுவதும் பழக்கடைகள், மாம்பழ குடோன்கள், தர்ப்பூசணி விற்பனை கடைகள் உள்ளிட்ட பழ மண்டிகள் மற்றும் பழக்கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பழங்கள் இயற்கையா பழுக்க வைக்கப்படுகிறதா, அல்லது பழங்களை பழுக்க வைக்க கார்பைட் கற்கள் உள்ளிட்ட ரசாயன முறைகள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அவர்கள் ஆய்வு செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம், ப.வேலூர், சேந்தமங்கலம் உள்ளிட்ட இடங்களில் 40-க்கும் மேற்பட்ட பழ மண்டிகள் மற்றும் பழக்கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின்போது 4.3 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் 2 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட நியமன அலுவலர் அருண் கூறுகையில், கார்பைட் கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிட்டால், குடல் எரிச்சல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்படும். பழங்கள் பழுக்க வைப்பதில், அரசு விதிமுறை மீறும் வணிகர்கள் கண்டறியப்பட்டால் அவர்களின் உணவு பாதுகாப்பு லைசென்ஸ் ரத்து செய்யப்படும். மேலும், சம்மந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

Tags:    

Similar News