நாமக்கல் ரயில் நிலையத்திற்கு பேருந்து வசதி: பயணிகள் கோரிக்கை

நாமக்கல் ரயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையம் வரை பஸ் வசதி செய்து தரவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2022-01-17 06:45 GMT
நாமக்கல் ரயில் நிலையம்.

ரயில்களில் கட்டணம் குறைவு, பாதுகாப்பு மற்றும் விரைவான பயணம் என்பதால் பெரும்பாலான பொதுமக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். நாமக்கல் ரயில் நிலையம், நாமக்கல் பஸ் நிலையத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. வாரத்திற்கு 4 தினசரி ரயில்கள் உட்பட 22 ரயில்கள், நாமக்கல் ரயில் நிலையத்திற்கு வந்து சென்றாலும், அங்கிருந்து நகருக்குள் செல்வதற்கும், பஸ் நிலையம் செல்வதற்கும் பஸ் வசதி இல்லை.

தற்பொழுது சென்னை சென்ட்ரல் - பாலக்காடு - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் நேரத்தில் மற்றும் அரசு போக்குவரத்துக்கழக பஸ் ஒன்று இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் பஸ் வசதி இல்லை. வெகுதூரத்தில் இருந்து, குறைவான கட்டணம் செலுத்தி ரயிலில் நாமக்கல் வந்தாலும், ரயில் நிலையத்தில் இருந்து நாமக்கல் நகரத்துக்குள் செல்ல ரூ.150 முதல் 200 வரை கட்டணம் செலுத்தி ஆட்டோவில் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. சில நேரங்களில் ஆட்டோ இல்லாமல் மக்கள் 2 கி.மீ தூரம் நடந்து பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.

திருச்செங்கோடு ரோட்டில் அமைந்துள்ள கலெக்டர் அலுவலகம், ஒருங்கிணைந்த கோர்ட், எஸ்.பி அலுவலகம், மாவட்ட பதிவு அலுவலகம் போன்ற அலுவலகங்களுக்கு வேலை நிமித்தமாக ராசிபுரம், மோகனூர் போன்ற ஊர்களில் இருந்து, சேலம் - கரூர் பயணிகள் ரயிலில் வரும் பயணிகள், ரயில் நிலையத்தில் இருந்து நடந்து பஸ் நிலையம் சென்று அங்கிருந்து அரசு அலுவலகங்களை சென்றடைவது மிகச் சிரமமாக உள்ளது.

மேலும் கடந்த வாரம் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி பாரத பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. இனி மருத்துவ கல்லூரிக்கு படிக்க வரும் மாணவர்கள் ரயிலில் வந்தாலும் அங்கு செல்ல பஸ் வசதி இல்லை. இதே நிலைமை தான் ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகளுக்கும். எனவே நாமக்கல் ரயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையம் வழியாக கலெக்டர் ஆபீஸ், எஸ்.பி ஆபீஸ், ஆர்டிஓ ஆபீஸ், அரசு மருத்துவக்கல்லூரி வரை செல்லும் வகையில் பஸ்கள் இயக்கப்பட வேண்டும்.

தற்போதைக்கு குறைந்தபட்சம் பெங்களூரு - நாகர்கோவில் - பெங்களூரு தினசரி ரயில், நாகர்கோவில் - மும்பை வாராந்திர ரயில் (வாரத்திற்கு 4 முறை), சேலம் - கரூர் பயணிகள் ரயில் வரும் நேரங்களிலாவது, பஸ் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என ரயில் பயணிகளும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News