அம்மாபாளையம் ஸ்ரீ மகா மாரியம்மன் புதிய ஆலய கும்பாபிசேக விழா

இன்று காலை நான்காம் கால யாக பூஜை தொடங்கி நாடி சந்தானம், காயத்திரி ஹோமத்துடன் மகா பூர்ணாஹுதி நிறைவு பெற்றது.

Update: 2022-06-09 11:15 GMT

அம்மாபாளையம் ஸ்ரீ மகா மாரியம்மன் புதிய திருக்கோயில் கும்பாபிசேக விழாவில் கோபுரங்களுக்கு புனித நீரை ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிசேகத்தை நடத்தி வைத்தனர்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த அம்மாபாளையம் புதூரில் புதிதாக எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி, அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன், அருள்மிகு ஸ்ரீ கடகடபான் திருக்கோயில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 6-ம் தேதி கிராம சாந்தியுடன் தொடங்கிய விழாவில், கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம், குபேர லட்சுமி, மகாலட்சுமி ஹோமங்கள் மற்றும் முதல் கால யாக சாலை பூஜைகளும் நடைபெற்றது. தொடர்ந்து 7-ம் தேதி கோபுரத்திற்கு தானியங்கள் நிரப்பப்பட்டன. பின்னர் காவிரியில் இருந்து புனித நீர் எடுத்துக்கொண்டு தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. புதிய மூர்த்திகள் ஊர்வலமும், முளைப்பாரி ஊர்வலமும் நடைபெற்றது. தொடர்ந்து 8-ம் தேதி மங்கள இசை வேதாபாராயணம் மற்றும் 2-ம் கால யாக பூஜை நடைபெற்றது. தாடர்ந்து இரவு 3-ம் கால யாக பூஜை சிறப்பாக நடைபெற்றது.

இன்று காலை நான்காம் கால யாக பூஜை தொடங்கி நாடி சந்தானம், காயத்திரி ஹோமத்துடன் மகா பூர்ணாஹுதி நிறைவு பெற்றது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மகா கணபதி, மகா மாரியம்மன், கடகடப்பான் ஆலயங்களின் கோபுரங்களில் புனித நீர் சிவாச்சாரியார்கள் கும்பாபிசேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பொதுமக்கள் விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News