அதிக விளைச்சல் பெற விதை பரிசோதனை அவசியம்: வேளாண்மைத்துறை

விவசாயிகள் பயிர்கள் அதிக விளைச்சல் பெற விதைப்பரிசோதனை அவசியம் என்று வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-05-13 01:45 GMT

கோப்பு படம் 

நாமக்கல் மாவட்ட வேளாண்மை அலுவலர் சரண்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிரிடும் பயிர்கள், பூச்சி நோய் தாக்குதலின்றி நன்கு முளைத்து செழிப்புடன் வளர்ந்து அதிக விளைச்சல் பெற்று லாபம் காண தரமான விதைகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும். தரமான விதை என்பது விதையின் முளைப்புத்திறன், புறத்தூய்மை, பிற ரக கலப்பு மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை குறிக்கும். தேவையான பயிர் எண்ணிக்கை பராமரிக்க நல்ல முளைப்புத்திறன் கொண்ட விதையை மட்டுமே விதைக்க வேண்டும்.

இதனால், விதை செலவு குறையும். புறத்தூய்மை பரிசோதனையில் பிற பயிர் விதை மற்றும் களை விதை ஆகிய கலப்புகள் உள்ளதா என கண்டறியப்படுவதால்,  விதையின் இனத்தூய்மை மற்றும் புறத்தூய்மை காப்பாற்றப்படும். முளைப்புத்திறனை காக்க ஈரப்பதத்தை தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும். விதைகளை சேமிக்கும்போது பூச்சி நோய் தாக்குதலால் முளைப்புத்திறன் கெடாமல் நீண்ட நாட்கள் சேமிக்க,  விதைகளின் ஈரப்பதம் குறிப்பிட்ட அளவுக்குமேல் இருத்தல் கூடாது. அதனால் முளைப்புத்திறனை காக்க பரிசோதனை மூலம் ஈரப்பதம் தெரிந்து கொள்ள வேண்டும்.

எனவே விதை விற்பனையாளர்கள் தாங்கள் இருப்புவைத்துள்ள விதையின் தரத்தை அறிந்து கொள்ளவும், விவசாயிகள் விதைப்புக்காக சேமித்து வைத்திருக்கும் விதையின் தரத்தை அறிந்துகொள்ளவும், விதை மாதிரி எடுத்து, உரிய விபரங்களுடன் ஒரு மாதிரிக்கு ரூ. 80 வீதம் கட்டணம் செலுத்தி, நாமக்கல் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் செயல்படும் விதைப்பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்து பயன்பெறலாம் என்று வேளாண்மை அலுவலர் சரண்யா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News